senthilkumar | drpsenthil@rediffmail.com

# தேவை வட்டி குறைப்பு

எஸ். கோபாலகிருஷ்ணன்
சென்ற பல மாதங்களாக வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது. காரணம், கடந்த ஆண்டு வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் - குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் - முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட கணிசமாக அதிகரிக்கப்பட்டது. வட்டி வீதம் உயர்ந்ததால் புதிதாக வீடு அல்லது பிளாட் வாங்குபவர்களின் எண்ணிக்கை சரிந்தது. அதுமட்டுமல்லாமல், 2007ம் ஆண்டில் வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்தக் கடன்தொகை, முந்தைய ஆண்டுகளில் வழங்கிய கடன்தொகையைவிடக் குறைவு என பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி சென்ற ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட புதிய கடன் கொள்கையில், கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. சமீபத்திய கடன்கொள்கையில், எந்தவித கடனுக்கான வட்டிவீதமும் குறைக்கப்படவில்லை. காரணம், ரிசர்வ் வங்கியின் முழுக்கவனமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே இருந்தது. வட்டிவீதம் குறைக்கப்பட்டால், பணவீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதியிருக்கக் கூடும். அதேநேரம், எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் வட்டிவீதத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே ரிசர்வ் வங்கிக்கு மேலோங்கியிருந்தது.
பாரத ரிசர்வ் வங்கி இந்த நிலைப்பாட்டை எடுத்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ், அந்த நாட்டில் வட்டி வீதத்தை 1984ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஒரே மூச்சில் முக்கால் சதவீதம் குறைத்தது. அதற்கு அடுத்த சில தினங்களில் மேலும் அரை சதவீதம் குறைத்தது.
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில், அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் அப்படியொரு மந்த நிலை இல்லை என்பது உண்மையே. எனினும், வட்டி அதிகரிப்பால், வீடு கட்டுவதற்கு அல்லது வாகனங்கள் வாங்குவதற்கு அல்லது தொழில் நடத்துவதற்குத் தேவையான வங்கிக் கடன் பெற மக்கள் முன்வரவில்லையெனில் அது நல்ல அறிகுறி அல்ல.
பொதுமக்களின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வட்டி வீதத்தைக் குறைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
சில தினங்களுக்கு முன் வெளியான தகவலின்படி, சென்ற டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி வீதம் 7.6 சதவீதமாகக் குறைந்து உள்ளது.
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி 13.4 சதவீதமாக இருந்தது. இதனைக் கருத்தில்கொண்டால், சென்ற டிசம்பர் மாதத்தில் 7.6 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரும் சரிவு என்பது தெளிவு.
தொழிற்சாலைகளில் உற்பத்தி, மின்சாரம், நுகர்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. பின்னர் வரக்கூடிய மந்த நிலைக்கு இது ஓர் அபாய அறிவிப்பு போன்றது.
இந்தப் பின்னணியில், சில தினங்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசியது கவனிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களில் வங்கிகள் கடன் வழங்கும் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, வீடு கட்டும் துறையிலும் நுகர்பொருள் உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி குறைந்திருப்பதற்கு வங்கிக் கடன் குறைந்திருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், வரும் காலத்தில் இந்தத் துறைகளில் வளர்ச்சி அதிகரிக்கும் வகையில், இவற்றுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வங்கிகளை வலியுறுத்தியுள்ளார்.
எதிர்பார்த்தபடி, பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தனது பிரதான கடன் வட்டி வீதத்தை 12.75 சதவீதத்திலிருந்து 12.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்களது வீட்டுக்கடன் வட்டி, சில்லறைக்கடன் வட்டி வீதங்களையும் குறைத்துக் கொண்டுள்ளன.
இதுவரை வட்டிக் குறைப்பை அறிவிக்காத இதர வங்கிகள் விரைவில் அவ்வித அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, வணிக ரீதியில் அவ்வப்போது வட்டி வீதத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு வங்கிகளுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. ரிசர்வ் வங்கிதான் அறிவிக்க வேண்டும் என்பதில்லை. எனினும், ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது கடன் மற்றும் நிதிக் கொள்கையை வெளியிடுகிறது. இதிலிருந்து வரும் சமிக்ஞைகளுக்காக வங்கிகள் காத்திருப்பது வழக்கம். இந்த முறை, நிதி அமைச்சர் தெரிவித்த சூசகமான அறிவுரை, வங்கிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
முன்னதாக, கடன் கொள்கை வெளியானபோது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் கடன் வழங்குவதில் சற்று நிதானப்போக்கு இருக்கட்டும் என ரிசர்வ் வங்கி கருதியது புரிந்து கொள்ளக்கூடியதே. அதிலும் குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படாத நேரம் அது. அது ஏற்றப்படும்போது, பணவீக்கம் உயரும் என்பது அறிந்ததே. தற்போது, நீண்டகாலமாகத் தள்ளி வைக்கப்பட்ட பெட்ரோல் விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டு விட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் பணவீக்கம் எந்த அளவு உயரக்கூடும் என்பதும் அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.
அதேநேரம், வளர்ச்சி விகிதம் குறைவதும் ஏற்புடையது அல்ல.
தற்போது, பல வங்கிகள் ஏற்கெனவே வட்டி வீதத்தைக் குறைத்துள்ள புதிய சூழலில், பாரத ரிசர்வ் வங்கி நிலைமையை மறு ஆய்வு செய்வதே பொருத்தமாக இருக்கும். ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய கடன் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாமல்விட்ட “பேங்க் ரேட்’ (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவீதம்); “ரெப்போ ரேட்’ எனப்படும் ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு முதலீட்டுப் பத்திரங்களின் மீது வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம்; மற்றும் “ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ எனப்படும் வங்கிகளிடம் உள்ள உபரிப் பணத்தைக் குறுகிய காலத்துக்கு ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டுக்கான வட்டிவீதம் ஆகிய அனைத்துவகை கடன்களுக்குமான வட்டிவீதத்தை விஞ்ஞான ரீதியில் மாற்றி அமைக்க பாரத ரிசர்வ் வங்கி முன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
அப்படிச் செய்வதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய வட்டிக் குறைப்பு செயல்பாடு ஸ்திரத்தன்மை அடைவதற்கு உதவுவதுடன் அது நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் அமையும்.
வீட்டுக் கடன்களுக்கு வட்டிக் குறைப்பை அறிவித்துள்ள வங்கிகள், அறிவிப்போடு நின்றுவிடாமல் வீட்டுக் கடன் மற்றும் சில்லறைக் கடன்களுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, உரிய கடன் வழங்குவதில் ஆக்கபூர்வமான ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான், சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று சதா கனவு காணும் நடுத்தர மக்களின் கனவு நனவாகும்.

0 comments: