சித்தர் என்ற சொல்லுக்குச் சித்தமானவர்கள் என்றும் பொருள் உண்டு. அவர்கள் அறிவியலை ஞானமாக்கியவர்கள். அவர்கள் மனித வாழ்க்கைக்குச் சித்தமானதைக் கண்டு சொன்னார்கள். உணவை உண்பதில் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகளை ஏற்படுத்தினார்கள். சுகவாழ்வுக்காக அறிவியல்ரீதியான சில வழக்கங் களை ஏற்படுத்தினார்கள்.
அவ்வாறு வந்தது தான் மனிதனின் தலைமுடி அளவு குறைவாய் இருத்தல் என்பது ஆரோக்கியமானது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. மேலைநாடுகளில் பெரும்பாலான ஆண்கள் தலையில் அதிக முடியையும் பெரிய மீசையையும் வைப்பதே இல்லை.
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.
பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக அவசியம் எனக் கண்டவர்கள் பழந்தமிழர்கள். தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலுமே அதற்கு ஈடாகாது. இன்றைக்கு மேல்நாடுகளில் தாய்ப்பால் குந்தைகளுக்குக் கொடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றார்கள். ஆடும், மாடும், நாயும் தாய்ப் பாலைத் தம் குட்டிகளுக்குக் கொடுக்கிறபோது மனிதர் மட்டும் ஏன் மாற்றுப்பால், மாட்டுப்பால் தேடுகின்றனர்.
குழந்தை பிறந்ததும் இயற்கையாகவே தாயின் மார்பில் பால் சுரக்கும். அது குழந்தை குடிக்கத்தான். அதனைக் கொடுக்காமல் விடுவது நாகரீகம் என்றும் மேனி அழகுக்கு நல்லது என்றும் நினைக்கின்றனர் சிலர். ஆனால் இவ்வாறு பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்காமல் விடுவதால் மார்பகப் புற்றுநோயே வருகிறதாம்.
கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கைக்கு எதிராக ஊசி போட்டுக் கொள்கிறார்கள். மாத்திரை சாப்பிடுகிறார்கள். இவற்றால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த உடலே கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கையான முறையில் சில வழிகளைச் சொல்லியிருக்கிறது.
வாரத்தில் ஒருநாள் மாதத்தில் பலநாள் பட்டினி(சில நோயாளிகள் தவிர்ந்த)யாய் இருப்பது உடலுக்கு நல்லது என்பது பழந்தமிழன் மருத்துவம். பட்டினி இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடிகிறது. நோய் எதிர்ப்பாற்றலை மிகுதிப்படுத்தலாம். நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். உடலில் உள்ள மோசமான கிருமிகளை அழிக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை.
இவற்றை நனைவில் கொண்டுதான் தவஞானிகள் உண்ணாவிரதத்தையும் பேசா விரதத்தையும் ஒருநாள் (வாரம் ஒரு முறை) பின்பற்றினர். அதிகாலைத் துயில் எழுதல் உடல் நலத்திற்கு நல்லது. நீண்ட வயது வாழ்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அதிகாலை எழுபவர்களாகத்தான் இருப்பார்கள். அதிகாலையில் காற்று தூய்மையாக இருக்கும். சுத்தமான பிராணவாயு தெருக்களில் அப்போது கிடைக்கும்.
குறிப்பாக மார்கழி, தை மாதங்களில் மிக நல்ல தரமான பிராண வாயு கிடைக்கும். இது பூமி சுழற்சியினால் ஏற்படும் செயல். எனவேதான் இதனை சுவாசிக்கும் பொருட்டு ஆண்கள் மார்கழி பஜனைக்குப் போக வைக்கப்பட்டார்கள். பெண்களை வீட்டு வாசலில் கோலம் போட வைத்தார்கள். கோலம் போடுவது பண்பாட்டு மரபு. அதே நேரத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய உயினங்களுக்கு உணவுக் கொடை இடுவதே முக்கியமானது.
ஆனால் இன்று தானிய மாவைத் தவிர்த்து வெள்ளைக்கல்லை அரைத்து மாவாக்கிக் கோலம் போடுகிறார் கள். இதனால் எறும்புகள் ஏமாந்தது நமக்குத் தெரியுமா என்ன?
அதே நேரத்தில் இந்த வெள்ளைக் கல் மாவு காற்றிலே கலந்து மனிதர்களின் மூச்சிலே இணைந்து நலத்திற்கு கேட்டை விளைவிக்கும். எத்தனை பேர் இதனை உணர்ந்தோம்?. நம்மை அறியாமலே நம் தெருக்களில் வளரும் வேப்பிலை மரம் செய்யும் நன்மை தெரியுமா? அது காற்றைத் தூய்மைப் படுத்துகிறது. நிழல் தருகிறது. தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது. அம்மை நோய் கண்டவர்களுக்கு வேப்பிலைப் படுக்கை சுகமானது. வயிற்றுப் புண், குஷ்டம், சர்க்கரை நோய்களுக்கு அதன் இலைகள் அருமருந்து.
எனவே தான் தமிழர்களோடு வேப்பமரம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.வில்வ இலையில் மருத்துவம் இருக்கிறது. உடலில் உள்ள ஐம்பூதங்களைச் சமநிலைப்படுத்துவது அதன் தீர்த்தம். எனவேதான் சில கோயில்களில் வில்வ இலைத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. வாழைப்பழம் புத்திசாலிகள் சாப்பிடும் பழம். ஏழைகளின் ஆப்பிள். உண்பவருக்குப் பல நன்மைகள் இப் பழத்தால் கிடைக்கின்றன. இது பழந்தமிழன் பண்பாட்டுப் பழமாகவும் இருக்கிறது.
அதே போன்ற அந்தப் பழம் தரும் வாழைமரம் தமிழர்களின் பண்பாட்டு மரமாகயிருக்கிறது.அதன் இலையில் உண்பது சுவைக்கு மட்டுமல்ல நலத்திற்கும் உதவுகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கும் நண்பனாக இருக்கிறது. தொடர்ந்து வாழை இலையில் உண்பவர்களின் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதன் தண்டுகள் சிறுநீர்க்கல் அடைப்புகளை நீக்கும். எனவே தான் மருந்தாகப் பயன்படுகிற மரங்களைப் பழந்தமிழர் வீட்டுத் தோட்டத்துக்குள் கொண்டு வந்தனர். தமிழன் வீட்டுத் தோட்டத்து மரங்கள், செடிகள், கொடிகள் உணவிற்கும் மருந்திற்கும் பயன்படுகின்றன.
ஆனால் இன்றைய மேல்நாட்டு நிாககத்தில் வெறும் அழகுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட மரம், செடி, கொடிகளே வீட்டுத் தோட்டத்தில் இருக் கின்றன. வீட்டுத் தோட்டத்தில் கறிவேப்பிலை இருந்தால் சாம்பாருக்கு உதவும். துளசிச் செடியின் இலைகள் வாயில் போட்டு மெல்ல உதவும். இஞ்சிச் செடியில் கிடைக்கும் இஞ்சி செரிமானத்திற்கு உதவும். மஞ்சள் செடியின் மஞ்சள் பூசிக் குளிக்க உதவும். மஞ்சள் சிறந்த ஒரு கிருமி நாசினி. ஆகவேதான் மஞ்சள் தூளைத் தண்ணீல் கரைத்து வீட்டு வாசலில் தெளிப்பார்கள். கிராமத்து திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டுதல் ஒரு அர்த்தத்தோடு வந்ததுதான். வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் முருங்கைக்கீரை ஆண்மையைப் பெருக்கும். கீழாநெல்லி மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும். அந்த மருந்து ஆங்கில மருந்தைவிட பலனை அள்ளித் தரவல்லது. அதன் சக்தி உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானிகள் கீழாநெல்லியை மாத்திரையில் கொண்டு வந்துள்ளனர். இது தமிழர் மருத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.
தமிழர் மருத்துவமாகிய சித்த மருத்துவம் 2,50,000 மூலிகை களைக் கொண்டு மருத்துவம் பேசுகிறது. இவற்றை நாம், ஆங்கில மருந்து என்பனவற்றை மட்டும் நம்பிக்கொண்டு புரிந்து கொள்ளாதது பெரிய தவறு. சித்த மருத்துவம் பக்க விளைவு அல்லது பின் விளைவு இல்லாத மருத்துவம். இந்த நாட்டின் இயற்கைச் சூழலுக்கேற்ப தட்ப- வெப்பநிலைகளுக்கேற்ப, கால மாற்றங்களுக்கேற்ப இயற்கையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளே அவைகள்.
அதே நேரத்தில் இயற்கை விதிகளுக்குட்பட்டு இயற்கை நெறியோடு உணவினை உண்ணுவதே உடலுக்கு நலம் சேர்க்கும் என்கிறது சித்த மருத்துவம். எனவே தமிழ்ச் சித்தர்களின் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தச் சித்தமானால் அது நம்மை நிச்சயம் வாழ வைக்கும்.
நன்றி- தென்செய்தி
(பழந்தமிழர் உணவு, உடை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு முதலான பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விளக்கும் நூல் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அந்த நூலிலிருந்து..).
Article:
http://thirutamil.blogspot.com/2008/06/blog-post.html
இன்று அஜிதனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். நாலைந்து நாட்களாகவே அருண்மொழி பதற்றமாக இருந்தாள். பதற்றத்தை எனக்கும் தொற்றவைக்க முயன்றாள். நான் பதற்றப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தாலும் மெல்லமெல்ல மாறிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஓர் எண்ணம்.
காலையில் அருண்மொழி எழுந்துவந்ததும் நான் என் வழக்கமான உபதேசத்தை ஆரம்பித்தேன். ”இதோ பார் அருணா, அவன் என்ன மார்க் வாங்கிறானோ அதான் அவன்… அவன் எப்டி இருந்தாலும் அவன் நம்ம புள்ளை…அந்த மார்க் இந்த மார்க்னு அனாவசியமா நீ எதிர்பார்ப்புகளை வளத்துக்காதே..அதை அவன் மேலே சுமத்தி அவன் மனசில கவலைய வளர விடக்கூடாது… தயவு செஞ்சு நான் சொல்றதைக் கேள். மார்க்கைப்பத்தி நீ அலட்டிக்கிடாதே…அவன் வாங்குற மார்க்கை அவனே வந்து சொல்லட்டும்…நல்ல மார்க்கா இருந்தா சந்தோஷப்படுவோம்…இல்லேண்ணா விட்டிருவோம்…”
”இல்ல ஜெயன், ஒரு நாநூறாவது இல்லாட்டி அவன் ·பஸ்ட் குரூப் எடுக்கமுடியாது…சரி, உனக்கு எல்லாரையும் தெரியும்…..ஆனா முந்நூத்தி எழுபத்தஞ்சாவது எடுக்கணும்ல?” நான் எரிச்சலுடன் ”ஏன் ·பஸ்ட் குரூப் எடுக்கணும்னு ஏதாவது வேண்டுதலா? மத்த குரூப்லயும் பிள்ளைங்க படிக்குதுல்ல? பேசாம இரு… பாஸ் ஆனாபோரும்… அதுகூட எதிர்பார்ப்பா இல்ல…” அவள் சோகமாக ”நான் அதுக்காச் சொல்லல்லை”என்றாள். ”…நீ எதுக்காகவும் சொல்லவேண்டாம்…” ”நல்லாத்தான் எழுதியிருக்கான்னு சொன்னான்…” ”அது அவன் சொல்றது. அவன் கையெழுத்தைப்பத்தி உனக்குத்தான் தெரியுமே”
எல்லா சிக்கல்களும் ஆரம்பித்தது அங்கிருந்துதான். அதற்கு முக்கியமான காரணமும் நானே. முதிரா இலட்சியவாதங்கள். அப்போது தருமபுரியில் வேலைபார்த்தோம். எல்.கெ.ஜியில் பையனைச் சேர்க்க முனைந்தபோது ”…நல்ல ஸ்கூல் அது இதுண்ணு சொல்றதெல்லாம் சும்மா டுபாக்கூர்… ஏதாவது ஒரு ஸ்கூலிலே போய் எழுத்து கத்துக்கிடணும்… அவ்வளவுதான்…இது இப்ப என்ன? எந்த ஸ்கூல் வீட்டு பக்கத்துல இருக்கோ அதுல சேக்கணும்.அதான் நல்லது.சும்மா குழந்தைகளை அங்க இங்கன்னு வேன்லயும் ஆட்டோலயும் போட்டு அலைக்கழிக்கக் கூடாது…” என்றேன்
அதை அவளும் ஏற்றுக் கொள்ளவே அவனை அருகே செந்தில்நகரில் ஒரு பள்ளியில் சேர்த்தோம். அங்கே கூலிவேலைக்கு ஆளெடுப்பதுபோல வீட்டில் சும்மா இருக்கும் பெண்களை வைத்து வகுப்பு எடுத்தார்கள். ”இப்பவே படிப்பு அது இதுண்ணெல்லாம் ஓவர் எக்ஸைட் ஆகவேண்டாம்… பிள்ளை அவன் பாட்டுக்கு வளரட்டும். கொஞ்சம் தெளிஞ்சதுக்குப் பிறகு அவனே படிப்பான்”என்றேன். சதா குழந்தைகள் படிப்பை பற்றியே பேசும் சக ஊழியர்கள் மேல் இருந்த கசப்பும் ஏகத்தாளமும் அப்படிச் சொல்லவைத்தன. அவனுடன் இரவு பகலாக விளையாடுவதில் காட்டிய உற்சாகத்தை அவன் என்ன படிக்கிறான் என்பதில் செலுத்தவில்லை.
யு.கெ.ஜி முடித்து ஒன்றாம் வகுப்பு குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் பள்ளியில். அங்கேசென்றபோது அவர்கள் சொன்னார்கள், பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அவனுக்கு ஒன்றுமே தெரியாது. மெல்லமெல்ல அவனை பயிற்றுவிக்க முயன்றபோதுதான் மெல்லமெல்ல அதன் உள் விஷயங்கள் எனக்குத் தெரிந்தன. அஜிதனுக்கு சிறுவயதிலேயே இடது கைப்பழக்கம். அதை பொதுவாகக் கவனித்திருந்தோம் என்றாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடிதடி,நுட்பமான வேலை என்றால் மட்டும்தான் இடது கை. அவன் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்கு ஒத்துவராதபோது அவனை தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். அந்தப் பள்ளி பாதிரிமார்கள் நடத்துவது. ”டிசிப்ளின் இருந்தா எல்லாம் வந்திரும்சார்.. ”என்பார் அந்த பாதிரியார். கூட எப்போதும் கையில் கம்புடன் ஒரு கன்யா ஸ்தீரீ.
சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும் கூட. நான் ஐந்தாம் வகுப்புவரை அடம் பிடித்தவன். ”நீ இப்டி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சி குலவினா அவன் எப்டி ஸ்கூலுக்குப் போவான்..?”என்று அருண்மொழி சொல்வாள். அதற்காக அவனைக் கொஞ்சாமல் விடமுடியுமா? நான் அவனிடமிருந்து புதிதாகக் கற்றுக் கொண்டே இருந்த நாட்கள் அவை. ”இப்டி பையன் கிட்டே பேசிட்டே இருக்கக் கூடாது சார்… அப்றம் அவங்க செல்லம் கொஞ்ச ஆரம்பிச்சிருவாங்க”என்றார் பக்கத்து வீட்டுக்காரர். ‘கொஞ்சிட்டுப்போறான் சார்!” .அதை அப்போது அப்படித்தான் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் மனதில் பள்ளிக் கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது.
நான் அவனை மீண்டும் இடது கைக்கு மாற்ற முயன்றேன். அது இன்னும் சிக்கலை உருவாக்குகிறது என்று தோன்றவே விட்டுவிட்டேன். வலது கைக்கு பழகிவிட்டிருந்தான். ஆனால் எழுத்துக்கள் மிக மிகச் சிக்கலாக இருக்கும். ஆச்சரியமாக சிலசமயம் அப்படியே கண்ணாடிப்பிம்பம் போலவே முழு வார்த்தையையும் எழுதிவிடுவான். அவனை பயிற்றுவிக்க முயலும் தோறும் அவனுக்கு பீதியும் விரக்தியும் ஏற்பட்டது. முதல் பத்து நிமிடங்களுக்குப் பின் அப்படியே மூளை ஸ்தம்பித்து விடும். அதன் பின்னர் ஒரு சொல் கூட கற்பிக்க முடியாது.
சுந்தர ராமசாமியிடம் இதைப்பற்றிச் சொன்னேன். ”நீங்க டீச் பண்ணாதீங்கோ…பிள்ளைகளை டீச் பண்றதுக்கு சுத்தமா தகுதியில்லாத ஆள் அவங்க அப்பாதான்…இப்ப உள்ள தேவை ஏபீசீடீ சொல்லிக் குடுக்கிறது. நீங்க அவன் எதிர்காலத்தைப் பத்தி கவலைப்பட்டு அவன்மேல ஏறி உக்கார டிரை பண்ணுவீங்க…டியூஷன் வைங்க…அப்டியே விட்டிருங்க… செடிகள்லாம் பாறையையே மீறி வளந்திருது..குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தாண்டி வளரக்கூடிய உயிர்ச்சக்தி இருக்கு…” என்றார்.
அப்போது ஆரம்பித்த டியூஷன். ஆனால் டியூஷன் ஆசிரியர்கள் என்னை தெருவில் பார்த்தால் புலம்புவார்கள். ”இ-ங்கிற எழுத்தை மட்டும் ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனுக்கு ஒரு வாரமாச் சொல்லித்தாறேன் சார்…என்ன சார் சொல்றது?” அவன் எப்படியோ ஒன்றைக் கற்றுக் கொண்டான். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் சில பாவனைகள். இதை எங்கோ அவன் கவனித்திருக்க வேண்டும். ஆசிரியைகள் எது சொன்னாலும் வாயை ஒருமாதிரி காட்டுவான். மண்டையை உருட்டுவான். அவர்கள் மெல்லமெல்ல அவனை அடிப்பதை நிறுத்தவே அதை தொடர ஆரம்பித்தான். ஆனால் இது வெளியேதான். வீட்டில் அவன் அசாதாரணமான சுட்டி. அவனுடைய நகைச்சுவை உணர்வையும் சாகசத்தன்மையையும் நான் ஒவ்வொரு கணமும் வியந்துகொண்டிருந்தேன்.
இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்னிடம் சொன்னாள் ”சார் பையனுக்கு எதாவது டிரீட்மெண்ட் எடுங்க சார்… பொறவு சொல்லலேண்ணு சொல்லப்பிடாது” அடிவயிற்றைக் கவ்விய அச்சத்துடன் ”என்ன மேடம்?” என்றேன். ”அவனுக்கு பிரெய்ன் குரோத்ல என்னமோ பிரச்சினை இருக்கு சார்…”. நான் கடும் சினத்துடன் ”… சும்மா எதாவது சொல்லி அவன் வாழ்க்கைய கெடுத்திராதீங்க…அவனுக்கு ஒண்ணுமில்லை. கைமாறி எழுதவச்சதினால கொஞ்சம் எழுத்து மோசமா இருக்கும்..அதுக்காக?”என்றேன். எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. ”நாங்க சொல்லியாச்சு..இனி எங்கமேலே பழி சொல்லக்கூடாது…” ” ஏய், இனி இந்தபேச்சை எவளாவது எடுத்தீங்கண்ணா வெட்டிப் போட்டிருவேன்…” என்று தெருவில் நின்று கூவினேன். பையனை அணைத்தபடி கிட்டத்தட்ட ஓடினேன்.
அருண்மொழியிடம் சொன்ன போது அவள் கதறி விட்டாள். ஒன்றும் தெரியாமல் அஜிதனும் அழுதான். அவனையே பார்த்தேன். உண்மையிலேயே மூளைத்திறனில் ஏதாவது சிக்கலா? வீடு முழுக்க புத்தகங்கள். இரவுபகலாக புத்தகம் பார்க்கும் புத்தகப் பிரியன் அவன். அந்தவயதிலேயே நான் அவனுக்கு பலநூறு கதைகளைச் சொல்லியிருந்தேன், கணிசமான கதைகளை அவனே மீண்டும் சொல்வான். மொத்த ராமாயண, மகாபாரதத்தையே அவனுக்கு நான்கு நான்கு மணிநேரம் வீதம் சொல்லி கேசட்டில் பதிவு செய்து வைத்திருந்தேன் [அதில் ”தசரதனுக்கு நாலு மனைவி…மனைவீண்ணா…” என நான் இழுக்க ” …எங்க அம்மா உனக்கு மனைவிதானே..மேலே சொல்லு’ என அவன் மழலையில் சொல்லும் இடம் என் நண்பர்களால் மிக விரும்பபட்டிருந்தது] மந்தபுத்தி என்று சொல்லும்படி என்ன இருக்கிறது? ஒருவேளை வளர வளந்த்தான் தெரியுமோ? ஒன்றும் புரியவில்லை.
சிலநாட்கள் கழித்துதான் அவன் பள்ளியில் அப்படி நடிப்பதை கண்டுபிடித்தேன். ஆனால் அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு எல்லா மிஸ்ஸ¤ம் ‘கெட்டமிஸ்’, ‘தடிச்சி மிஸ்’ தான். ஆசிரியர்கள் அவனை மனமார வெறுத்தார்கள். அவனது கல்வி வாழ்க்கையில் அவனை விரும்பிய ஒரு ஆசிரியரை ஒன்பதாம் வகுப்பு வரை அவன் காண நேர்ந்ததில்லை. எல்லா பாடங்களிலும் அவனுக்கு சிவப்பு மைதான். எப்போதோ ஒருமுறை எழுபது மதிப்பெண் கணிதத்துக்கு வாங்கியது தவிர்த்தால் அவன் எப்போதுமே தேர்வுகளில் வென்றதில்லை. அவனது வகுப்புப் பாட நூல்கள் எழுதப்படாமலிருக்கும். அவற்றை ஆசிரியர்கள் அவனை அடித்து வதைத்துப் பார்த்தபின் வேறு பையன்க¨ளை வைத்து எழுத வைப்பார்கள். அந்த எழுத்துக்களை இவனது எழுத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அருண்மொழி கண்ணீர் விட்டு அழுவாள்.
ஆனால் மூன்றாம் வகுப்பு முதல் அவன் பெரும் வாசகன். ஒரே இரவில் சிவகாமியின் சபதத்தை வாசிக்கும்போது அவன் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது தமிழுக்கு அவனுக்கு நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தாள் ஆசிரியை. சோவியத் ருஷ்ய வெளியீடுகளான அறிவியல்நூல்களை இரவு பகலாக படிப்பவனுக்கு அறிவியலில் ஒரே பாடத்தில் ஒரே வினாவைக்கூட எழுதத் தெரியவில்லை. முனைவர் ஏ.கெ.பெருமாளின் அத்தனை வரலாற்று நூல்களையும் ஆறாம் வகுப்புக்குள் அவன் வாசித்திருந்தான், வரலாற்றில் ஒருபோதும் இரட்டை இலக்க மதிப்பெண் வென்றதில்லை.
வீட்டுக்கு வந்திருந்த நண்பர் பாவண்ணனிடம் புலம்பியபோது அவர் சொன்னார், ”தம்பிக்கு அறிவில்லைன்னா அறிவான பிள்ளைகளே உலகத்திலே இல்லைண்ணு அர்த்தம்..அவனுக்கு சொல்லிக்குடுக்க டீச்சர்களால முடியலை. கவலைப்படாதீங்க.. அவனே படிப்பான்…”. முதல் பிரச்சினை எழுத்துதான். ·பூக்கோ சொல்லியிருக்கிறார் என்று நினைவு, நம் பண்பாட்டில் முதலில் குழந்தையின் விரல்களுக்கு ஆக்ரோபேடிக்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம் என. அதைக் கற்காமல் உலகமே அவனுக்கு இல்லை. எழுத முடியாமையில் இருந்து உருவான கசப்பு காரணமாக பள்ளிமேலேயே கடும் துவேஷம்.
அதன்பின் நகர்கோயிலில் புகழ்பெற்ற கிறித்துவ பள்ளியில் அவனைச் சேர்த்தோம். அவன் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி. கூடவே என் வாழ்க்கையையும். அனேகமாக தினமும் எனக்கான கட்டளைகள். அதன்படிப் பள்ளிக்குச் சென்றால் கொலைக்குற்றவாளியை நடத்துவது போல நடத்துவார்கள். மணிக்கணக்காக யார் யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். முதலில் ·பாதர். அவரிடம் அனுமதி பெற்றபின் ஸிஸ்டர். அவர் சொன்னபின் வகுப்பு ஆசிரியை. அதன் பின் பாட ஆசிரியை. ஒவ்வொருவரும் எனக்கு உபதேசங்கள் அளிப்பார்கள். வசைபாடுவார்கள். மிரட்டுவார்கள். என் இது நாள் வரையிலான வாழ்க்கையில் நான் மிக அதிகமாக எங்காவது அவமானமும் சிறுமையும் பட்டிருக்கிறேன் என்றால் அந்தப் பள்ளியில்தான்.
அஜிதனை அவன் ஒரு உதவாக்கரை என்றும், முட்டாள் என்றும் முழுமையாக நம்பச் செய்தது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி அளித்த அழுத்தம் காரணமாக நானும் அக்காலத்தில் அவனிடம் சற்றே கடுமையாக நடந்து கொண்டேன். நாலைந்துமுறை அவனை அடித்திருக்கிறேன். ‘முன்னேற்ற’ சீட்டை தூக்கி வீசியிருக்கிறேன். புத்தகங்களை கிழித்து எறிந்திருக்கிறேன். அதன் பின் அவனை அணைத்து கண்ணிருடன் சமாதானம் செய்வேன். இரவில் தூங்கும் அவனைப் பார்த்தபடி நிற்பேன். என் தந்தைக்கு நான் கடுமையான மன உளைச்சல்களை அளித்திருக்கிறேன். ஆன்மீகத்தேடல் அது இது என்று வீட்டை விட்டு ஓடியிருக்கிறேன். என்னைப் பிரிந்தபோது அவர் மனம் உடைந்து பலநாட்கள் ஆஸ்பத்தியிரில் கிடந்திருக்கிறார். அந்தப் பாவம்தான் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதா என மனம் ஏங்கும்
அவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுஒருநாள் என் கழுத்துவலிக்காக காயத்திருமேனி எண்ணையை போட்டு நீவி விட அவனிடம் சொன்னேன். நான் குப்புறக் கிடக்க அவன் என் மீது அமர்ந்திருந்தான். அருண்மொழி அவ்வழியாகசென்றாள். என்னிடம் ”ஏன், சொல்லியிருந்தா நான் போட்டுவிடமாட்டேனா?” என்றாள். ”இதில போட்டிருக்கு…உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்கதான் போட்டு விடணும்ணு…” என்றேன்.
சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன். எழுந்து பார்த்தால் அழுது கொண்டிருந்தான். ”என்னடா? என்னடா?”என்றேன். பதில் சொல்லாமல் குறுகி அமர்ந்து அழுதான். ”என்னடா?” என்று கேட்டபோது ”உனக்கு நெஜமாவே என்னைய ரொம்ப பிடிக்குமா?”என்றான் ”என்னடா இது முட்டாத்தனமா கேட்டுட்டு…அப்பாக்கு உலகத்திலேயே உன்னைத்தான் ரொம்பப் பிடிக்கும்… இதுகூட தெரியாதா உனக்கு?” என்றேன். அப்படியே சீறல்போன்று ஒலி எழுப்பி அழுதான். ”நான் நெனைச்சேன், உனக்கு என்னை பிடிக்கல்லேண்ணு…நீ பெரிய ஆளு…புக்கெல்லாம் எளுதறே…காலேஜ் சாரெல்லாம் உன்னை தேடி வராங்க..நான் மக்குதானே..எனக்கு ஒண்ணுமே தெரியல்ல… அதான் நீயும் அம்மாவும் என்னை அடிக்கிறீங்க…நான் இனிமே ஸ்கூலுக்கு போகல்லை..என்னைய ஓட்டலிலே சேத்துவிடு..நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு ரூபா கொண்டுவந்து அம்மாட்ட குடுப்பேன்….”
அந்த நிமிடத்தில் என் நெஞ்சு பொங்கியதை இப்போதும் கை நடுங்காமல் எண்ண இயலவில்லை. எப்போதோ அந்த ஓட்டல் பேச்சு அருண்மொழி வாயில் வந்திருக்கிறது– படிக்காவிட்டால் ஓட்டல் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று. அப்படியே அவனை அணைத்துக் கொண்டேன்.
”நீ மக்குண்ணு யாருடா சொன்னா? ” ”எங்க மிஸ் எல்லாருமே சொல்றாங்க…அம்மாவும் சொன்னாங்க..நீ கூட சொன்னே..”நான் அவனை அணைத்து ”நீ மக்குன்னா உலகத்திலே யாருமே புத்திசாலி இல்லை…அப்பா உன் மேல உள்ள ஆசையிலதானே அப்டி சொன்னேன்” என்றேன்.
அன்று அவனிடம் வெளியே கூட்டிப்போய் பேசினேன். நான் ஒரு மாணவனாக எத்தனை கொடுமைபடுத்தப்பட்டேன் என்று சொன்னேன். என்னை பெரும்பாலான ஆசிரியர்கள் வெறுத்தார்கள். அடித்தார்கள். எனக்கு கணக்கு கொஞ்சம்கூட வரவில்லை. என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறைகூட தேர்ச்சி பெறவில்லை, படிப்பை முடிக்கவும் இல்லை.
”எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்டி இல்லை. பணம் வேணும்ணா அதை நான் சம்பாதிப்பேன். அதனால் நீஇனிமே உனக்கு பிடிச்சதை மட்டும் படி… உனக்கு வேண்டிய பணத்தை நானே சம்பாதிக்கிறேன்” என்றேன். ”…இனி மூணுமாசம். இந்த பள்ளிகூடத்திலே இருந்து உன்னை கூட்டிட்டுபோய் கவர்மெண்ட் ஸ்கூலிலே சேக்கிறேன்..அங்க உங்கிட்ட யாருமே படிக்கச் சொல்ல மாட்டாங்க… நான் இனி ஒருமுறைகூட உங்கிட்ட படிக்கச் சொல்லமாட்டேன்..மார்க் என்னன்னே கேட்க மாட்டேன்..இனிமே உன்னை யாருமே படிப்பு விஷயமா திட்ட மாட்டாங்க…போருமா?”
மறுவருடம் அரசினர் பள்ளியில் சேர்த்தபோது நண்பர்கள் எதிர்த்தார்கள். நீலகண்டன் அரவிந்தன் ”நீங்கள் உணர்ச்சிவசப்படுறீங்க….இதெல்லாம் அப்டி முடிவுசெய்ற விஷயம் இல்லை” என்றார். வசந்தகுமார் மட்டும்தான் ”சேர்த்து விடுங்க ஜெயன் படிப்பு வரலேண்ணா என்ன, போராடி ஜெயிக்கிற புத்தி வரட்டும்”என்றார்
ஏழாம் வகுப்பு முதல் அரசாங்கப் பள்ளி. அப்பள்ளி அவனுக்குக் காட்டிய உலகமே வேறு. வீட்டில் சாப்பாடு இல்லாமல் பையன்கள் மதியம் சாப்பிடாமல் பசித்திருபபர்கள் என்ற தகவல் அவன் உலகையே பல நாட்கள் பல மாதங்கள் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தனிமையில் அதை எண்ணி அவன் கண்ணீர் விட்டிருக்கிறான். அவனது சக மாணவர்கள் சனி ஞாயிறில் கூலிவேலைக்குச் சென்று வருவார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவே அவனுக்கு கஷ்டம் இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவன் கொண்டுபோகும் சாப்பாட்டை பையன்கள் சாப்பிட அவன் சத்துணவாக அளிக்கப்படும் உணவை உண்பான். மீன் , இறைச்சி கொண்டுபோகும் நாட்களில் பெரிய டிபன் கேரியர் நிறைய கொண்டுசென்றாக வேண்டும். எங்கே முத்தாரம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றினாலும் பையன்களுடன் சேர்ந்து போய் சாப்பிட்டு விடுவான். அவனைப்போன்ற பையன்கள் வளரும் பருவத்து வயிற்றின் தீவிரத்தால் அலைவதை அவனே அவர்களுடன் வாழ்ந்து கற்றான்.நானே ஒருமுறை அவனை ஒரு அன்னதான வரிசையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.
புதிய பள்ளி அவனுக்கு நண்பர்களை அளித்தது. நண்பர்கள் அவனுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். பள்ளிக்கு மகிழ்ச்சியாகச்செல்லும் அஜிதனை முதல்முறையாகக் காண ஆரம்பித்தோம். அவன் படித்த கிறித்தவப் பள்ளியில் பள்ளிக்குள் நுழைந்த மறு கணமே வரிசை உருவாகிவிடும். எப்போதும் ஆசிரியர்களின் கண்காணிப்பு இருக்கும். விளையாட்டுகூட விளையாட்டு ஆசிரியரால் அளிக்கப்படும் ஒரு பயிற்சி மட்டுமே. ஒருவரோடு ஒருவர் பேசுவதும் சிரிப்பதும் கடுமையான குற்றம் அங்கே. அத்தனை வருடங்கள் அத்தகைய பள்ளிகளில் படித்தும்கூட அவன் நட்பு என்றால் என்ன என்று அறிந்தது இல்லை. அதைவிட மோசமான விஷயம், நட்பு என்றால் தவறு என்றே கற்பிக்கப்பட்ட குழந்தைகள் அங்கே படித்தார்கள். அந்தஸ்து , சாதி, மதம் நோக்கி கணக்கிட்டே நட்பு கொள்ள வேண்டும் என்று அங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டிருந்தது.
இதை ஒரு கொள்கையாகச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் எனக்கு கொள்கை என்றாலே பயமாக இருக்கிறது. பள்ளிக்கல்வியை இப்போது நேர் பாதிக்கு மேல் நாம் பாதிரிமார்கள் அல்லது துறவியர் கையில் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் அதற்கான தகுதி கொண்டவர்கள் தானா என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது. பொதுவாகவே அவர்கள் உலக நிராகரிப்பை இயல்பாகக் கொண்டவர்கள். உற்சாகம், உயிர்துடிப்பு அனைத்தையும் அவர்கள் மீறல்களாகவே காண்கிறார்கள். கொஞ்சம்கூட படைப்பூக்கம் அவர்களிடம் இருப்பதில்லை. அவர்களின் உலகம் ‘கூடாதவற்றின்’ தொகை. அவர்களின் ஞானம் என்பது விலக்குகளின் பட்டியலே. அவர்களிடம் புத்துலகம் நோக்கி உற்சாகமாக மலர்ந்தெழ வேண்டிய குழந்தைகளை நாம் ஒபப்டைக்கலாமா? அவர்களின் பள்ளியில் பயின்ற மாணவர் ஒரு ‘பயிற்றுவிக்கப்பட்ட’ மூளையாக ஆகலாம். லௌகீகமாக வெல்லலாம். ஆனால் அவன் இழப்பவை அவன் அடைவனவற்றை விட பல மடங்கு அதிகம் அல்லவா?
இப்போது அந்தப்பள்ளியில் ஆசிரியை வகுப்பில் இல்லாதபோது மாணவர்களை கண்காணிக்க ‘குளோஸ்டு சர்க்யூட் ‘ காமிராக்களை பொருத்தியிருப்பதாகவும், அதைச் சொல்லியே பெற்றோர்களை கவர்வதாகவும் சொன்னார்கள். நம்பவே முடியவில்லை. கண்காணிப்பின் அடக்குமுறையைப் பற்றி எழுதிய ஃபூக்கோ இங்கேவந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த அரசுப்ப்பள்ளியில் எல்லமே கட்டற்றுதான். சட்டை கிழியாமல் அஜிதன் பள்ளி விட்டு வரும் நாட்கள் குறைவு. சண்டைகள் சச்சரவுகள். அதைவிட தீவிரமான நட்புகள். பரீட்சைக்கு முந்தையநாள் இரவில் கூப்பிட்டு பொங்கும் பேரார்வத்துடன் ஸிலபஸ் என்ன என்று கேட்கும் சக மாணவன் அஜய்குமார் தான் அஜிதனின் உயிர்நண்பன். ஒருவனின் பையில் இருந்து பணத்தை பிடுங்கி இன்னொருவன் சாப்பிடலாம். ”எங்க வீட்லே அம்மை தேங்காத்தொவையலையே போட்டு கழுத்தறுக்கிறாடா. பணமில்ல பாத்துக்கோ…உங்கம்மைட்ட நல்ல கோளியா குடுத்தனுப்பச் சொல்லு’ என்று எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் சொல்லியனுப்பலாம். இந்த உலகமே வேறு. அஜிதனுக்கு அழுக்கில்லா சீருடை அணிந்து போகும் ‘கான்வெண்ட்’ பையன்கள் மேல் உள்ள இளக்காரமும் நக்கலும் சாதாரணமல்ல. ”என்னடா பண்ணுவீங்க?” ”கொடுமைல்லாம் ஒண்ணும் பண்றதில்ல அப்பா…டேய், இங்கவாடான்னு கூப்பிட்டு மண்டையிலே ஒரு தட்டு தட்டி அனுப்பிருவோம். முறைச்சான்னா மட்டும்தான் அடி”
ஆனால் நான் அவனை கைவிட்டுவிட்டதாக நண்பர்கள் சொன்னது தவறு என நானறிவேன். அவனுடன் எப்போதும் பேசிக் கோண்டே இருந்தேன். அவன் பேசுவதைக் கேட்டுக் கோண்டே இருந்தேன். அது ஒரு கடமையாக அல்ல. உண்மையிலேயே பையன்களின் உலகம்போல உற்சாகமான ஓர் உலகம் வேறு இல்லை.நகைச்சுவை உணர்வு கொண்ட அஜிதனைப்போன்ற ஒரு பையனின் உலகம் குமிழியும் கொப்பளிப்புமான ஒன்று [ ஒரு டீம் பையன்க அவனுகளுக்குள்ள பேசறது வேற லேங்வேஜ் அப்பா.. அதில ஒருத்தனை தனியா கூப்பிட்டேன். சின்னப்பையன். ‘டேய் என்ன பாசைடா பேசறீங்க?’ன்னு கேட்டேன். அதுக்கு அவன் ‘தெலுங்குடப்பிங் அண்ணா’ ன்னு சொல்றான்]
மேலும் அவனிடம் நான் எதைவேண்டுமானாலும் பேசலாம். அத்வைதத்துக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உள்ள வேறுபாடு. தல்ஸ்தோய் ரயில் நிலையத்தில் இறந்ததில் உள்ள குறியீட்டு அர்த்தம். வீட்டுக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் பேராசிரியர்கள், விமரிசகர்கள், ஆய்வாளர்கள் அனைவருக்கும் அவனை தெரியும். அவர்கள் பேசுவது அவனுக்குப் புரியும் என்று அவர்கள் அறிவார்கள். அவன் கேட்டு அறிந்து வளர்வது ஓர் அறிவார்ந்த உலகம். அவனது மோகமே அதில்தான். ”தோளுக்குமேலே வளர்ந்தா தோழன்னு சொல்றாங்களே அப்பா” ”ஆமாடா. அது ரைட்டுதான்..” ”அப்றம் சொல்லு மச்சி…” என்பது அவன் பாணி. ”என்னடா சினிமாக்கு போனியா?”என்று ஒருநாள் விளையாட்டாக கேட்டேன் ”இந்த பார். நான் போனா உன்னால இந்த ஜென்மத்திலே கண்டுபிடிக்க முடியாது… நீயே ஒரு தத்தக்காபித்தக்கா எங்க போனாலும் நான் கூட்டிட்டுபோகணும் உன்னை… சினிமாவுக்குப் போகல்லை. தெரியாம போக மாட்டேன் போருமா?”
ஒரு கட்டத்தில் அஜிதனுக்கு புனைகதைகளில் ஆர்வம் போய் இயற்கையியலில் ஆர்வம் பிறந்தது. அதற்கு முதற்காரணம் . சு.தியடோர் பாஸ்கரன் .இரண்டாம் காரணம் அ.முத்துலிங்கம். அது தீயாக பற்றிக் கொள்ள அதிலேயே நாட்கள். பறவைகளை பார்ப்பது ‘லை·ப் லிஸ்ட்’ தயாரிப்பது [117] அதைப்பற்றிய நூல்களை சேகரிப்பது என ஒரு உக்கிரமான பொழுதுபோக்கு பற்றிக் கொண்டது. ‘நேஷனல் ஜ்யாக்ர·பிக்’ சேனலில் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பெயர்கள் ஓடிக் கொண்டிருந்தன. ”எவ்ளவு பேரு..”என்றேன். ”அந்த லிஸ்டுல ஒரு நாள் ஜெ.அஜிதன் பேரும் இருக்கும்” என்றான். பிறகு சிறிய சிரிப்புடன் ”..அந்த ஏரியால உள்ளவங்க யாருக்கும் ஜெயமோகன்னா யாருண்ணே தெரிஞ்சிருக்காது…அய்யாதான் பெரிய ஆளு அங்கே”
ஒரு கனவு உருவாகிவிட்டிருப்பதை நான் கண்டேன். வெற்றியும் தோல்வியும் காலத்தின் அளவிலா ஆட்டத்தில் எங்கோ எப்படியோ தீர்மானமாகிறது.ஆனால் இதேவயதில் என்னை அலைக்கழித்தது இதேபோன்ற ஒரு பெருங்கனவுதான். உக்கிரமான மின்சாரம் ஓடும் கம்பிபோல என்னை அது தகிக்க வைத்தது அன்று. அந்த தகிப்பைக் கண்டேன். இளமைக்கு அழகு அத்தகைய கனவுதான்.
அவன் படிப்புமீது கவனம்செலுத்துவதாகவும் அதற்குக் காரணம் அந்த கனவே என்றும் அருண்மொழி சொன்னாள். வாக்குறுதியின்படி நான் மதிப்பெண்களைக் கவனிப்பதில்லை. சிலமாதம் முன்பு சொன்னான் ”இப்ப நீ வேணுமானா மார்க்கைப் பாக்கலாம்”. சிரித்தபடி ”வேண்டாம்” என்று பேனாவை மூடினேன்.
ஒன்பது மணிக்கு இணையத் தொடர்பு மூலம் தேர்வு முடிவுகளைப் பார்த்தேன். அருண்மொழி பதற்றமாக இருந்தாள். அவனும் பதற்றமாகவே இருந்தான். நான் பதற்றமில்லை என்று சொல்லிக் கொண்டேன். மதிப்பெண்கள். ஐநூறுக்கு நாநூற்று அறுபது. 92 சதவீதம். கணிதத்தில் 99. அறிவியலில் 97. மதிப்பெண்கள் குறைந்தது தமிழில்தான், கையெழுத்து காரணமாக. ”அப்பா உன் மூஞ்சியிலே கரிய அள்ளி பூசிட்டேன்ல?”என்றான் சிரித்தபடி. ”ஆமாடா”என்றேன். ”சும்மா ஜாலியாச் சொன்னேன்பா….உனக்காகத்தானே நான் படிச்சதே”
சாயங்காலம் அ.கா.பெருமாள் வந்தார். ”நல்ல மார்க்..இனி எதுக்கு சர்ககர் ஸ்கூல்? பேசாம கான்வெண்டிலே சேருங்க” என்று பல பக்கங்களில் இருந்தும் உபதேசங்கள் வந்தன என்பதை அவரிடம் சொன்னேன். ”அதுபின்னே நம்மாளுக புத்தி அப்டித்தானே போகும்?” என்றார்.
ஆனால் இப்போது இதெல்லாம் நாம் சொல்லும் இடத்தில் இல்லை. அஜிதன் அவனே போய் அரசுப்ப்ள்ளியில் தலைமையாசிரியரை பார்த்து விண்ணபப படிவமே வாங்கிவந்துவிட்டான். ”·பஸ்ட் குரூப் கெடைக்குமா? ” என்றான். ”கெடைக்குமாவா? கூப்பிட்டு உக்கர வச்சு குடுப்பாங்க…” என்றார் அ.கா.பெருமாள். ”பிள்ளைகளுக்கு மார்க் இருந்தாலே பெத்தவங்களுக்கு ஒரு கெத்துதான்”
நாளை மறுநாள் மதிப்பெண் அட்டை கிடைக்கும். அதற்கு அடுத்த நாள் சேர்த்துவிடவேண்டும். நான் ”நீ போனால் போதாதா அருணா?”என்றேன்.அஜிதன் ”இல்லப்பா நீ வரணும்..நீ தான் வரணும்…” என்றான்.
பத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு…
Article:
http://jeyamohan.in/?p=488
Thiruvengimalai Saravanan......................
இந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.
இந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்
அதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா?’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித
சங்கடமும் வந்துவிடக்கூடாது.
இவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே
கேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.
வீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சரிப்பார்கள்.
இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.
இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.
இந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.
வீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.
வீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.
அந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.
சங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேடையில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.
வீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.
1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.
தனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.
வீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்பம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.
1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.
ஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..
நன்றி: டாக்டர் பக்கிரிசாமிபாரதி.
அரசு இசைக்கல்லூரி. சென்னை_28.
பைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.
தமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.
பள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.
திருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.
சரி, யார் இந்த வீரம்மாள்?
திருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்
16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.
வீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.
வீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.
ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.
பள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.
ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.
பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.
பள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.
வானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார்.
வானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.
அந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.
பேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.
அப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.
அதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.
திருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.
பலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.
கணவனை விட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.
2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..
செல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.
கைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.
சிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே?
சிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் தேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.
சிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.
ராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.
ஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.
குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.
சென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.
1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.
அதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.
நேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.
பள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.
கல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.
கல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.
சென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.
மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.
அவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ
மாமியார் மெச்சியவர்!
மாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.
‘‘அய்த்தான் எனக்கு ஒண்ணுமில்ல!’’
சிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான் வண்டி எடுப்பார். ஆனால் அன்று அவர் தூக்கக் கலக்கத்துடனே வண்டி ஓட்டியிருக்கிறார். திருப்பதி மலையில் ஏறும்போது ஒரு திருப்பத்தில் கார் தலைகீழா கவிழ்ந்து மலையில் உருளத் துவங்கியது. இரண்டாயிரம் அடி பள்ளம். எங்கள் புண்ணியம் கார் மரத்தில் சிக்கி அப்படியே தொங்கியது. எல்லோருக்கும் நல்ல காயம். சிகப்பிக்கு படுகாயம். மேலெல்லாம் ரத்தம். மெல்ல அவரை மேலே தூக்கினோம். என்மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்துவிட்டு என் ரத்தத்தைக் கழுவப் பார்த்தாங்க. நான் தடுத்து, ‘உனக்குத்தான் ரொம்ப காயம்’ என்றேன். அதற்கு சிகப்பி, ‘அய்த்தான் எனக்கு காயமில்லை. உங்களுக்கு இப்படியாகிவிட்டதே’ என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்துவிட்டாங்க. ஒரு வாரம் சுயநினைவு இல்லாம இருந்தாங்க. என்னுடைய உலகமாய் இருந்தாங்க. இப்போது நான் தனி உலகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும்போது வார்த்தைகள் தடுமாறுகிறது. அது தடுமாற்றம் அல்ல மனைவி மேல் அவர் வைத்துள்ள பாசம்.
பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்து பொதுத் தொண்டில் ஈடுபடுவது ஒரு ரகம். எந்த வசதியும் இல்லாமலேயே பொதுப்பணிகளில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்வது மற்றொரு ரகம்.
இதில் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தருமாம்பாள்.
பணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய வீரத்தமிழன்னைஅவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர். மனிதாபிமானத்தை மூலதனமாக வைத்து, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத புனிதமான தொண்டுள்ளம் அவருடையது. அதனால்தான் மறக்கமுடியாத மங்கையாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் டாக்டர் தருமாம்பாள்.
தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடிதான் இவரது சொந்த ஊர். அப்பா சாமிநாதன். அம்மா நாச்சியார். வேளாண் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை சாமிநாதன் மிகப் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை நண்பர். இவரது தாத்தா திவான் பேஷ்கராக இருந்தவர்.
இவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சரஸ்வதி. இவரது பூர்வீகம் கருந்தட்டாங்குடியாக இருந்தாலும், இவர் பிறந்தது திருவையாறு. ஆண்டு 1890. இவ்வூர் இறைவன் பெயர் அய்யாறப்பன். இறைவி அறம் வளர்த்தாள். இறைவியை தர்மசம்வர்த்தினி என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. அதைத்தான் பின்னர் தருமாம்பாள் என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது. தருமாம்பாள் இளம்வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால், ‘லக்குமி’ என்ற பெண்தான் இவரை வளர்த்தார். பெற்றோரை இழந்ததால் அவர் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இருந்தாலும், தருமாம்பாள் சும்மா இருந்துவிடவில்லை. தானாகவே கல்வி கற்கத் தொடங்கினார். தமிழ் மீது இருந்த அளவுகடந்த பற்றின் காரணமாக வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியம், திருநாவுக்கரசு முதலியார், பண்டித நாராயணி அம்மையார் ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். இன்னும் சில பண்டிதர்களைத் தேடிப்போய் தெலுங்கில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார்.
நாடகத் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றினால், அந்நாளில் நாடக நடிகராக இருந்த குடியேற்றம் முனுசாமி நாயுடுவைக் காதலித்து மணந்துகொண்டார். முனுசாமி நாயுடு ராஜபார்ட் வேஷம் போடுவதில் வல்லவர். கணவரோடு ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தாலும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.
மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. அதற்குப் பயன்படும் விதத்தில் அவர் சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.
1930_களின் தொடக்கத்தில் சென்னையில் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. வேப்பேரி கங்காதர தேவர், தியாகராய நகர் எஸ்.எஸ்.ஆனந்தன், சைதாப் பேட்டை தணிகாசல வைத்தியர், தங்கசாலை சி.த.ஆறுமுகம்பிள்ளை போன்ற ஒரு சில சித்த வைத்தியர்களே புகழ்பெற்ற மருத்துவர்களாக அறியப்பட்டனர். அந்த வரிசையில் பெத்துநாய்க்கன் பேட்டையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.
தருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.
தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார். இதில் பெண்கள் பலரும் கலந்துகொள்ள முன் உதாரணமாக இருந்ததே தருமாம்பாள்தான். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
தருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இப்படி அவரது தொண்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
புகழின் உச்சியில் இருந்தவர்கள்கூட தருமாம்பாளின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அளவிற்கு அவரது பண்பு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி காதில் விழுந்த தவறான செய்திகளைக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து புகழுக்கும் உடலுக்கும் கேடு வராமல் நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூற, அவரும் அதன்படி மாறி நடந்தது பலரை வியப்பால் ஆழ்த்தியது.
1944_ல் ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்தமான் தீவில் தண்டனையைக் கழிக்க வேண்டும் என தீர்ப்பானது. கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் செய்வதறியாது தருமாம்பாளை அணுகினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சாதாரண காரியமல்ல என்றாலும், டாக்டர் தருமாம்பாள் சென்னையில் உள்ள பலரை அணுகி பொருள் திரட்டி, அந்த வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார். அப்போது கலை உலகமே தருமாம்பாளை எழுந்து நின்று வணங்கியது.
தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1940_க்கு முன்பு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் ஒரு பெரிய மரியாதையே இல்லாமல்தான் இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தரமாக ஒதுக்கப்பட்ட நிலை. ஊதியத்திலும் அவர்களுக்கு அந்த நிலை இருந்ததை எதிர்த்து பெரிய போராட்டமே நடத்தினார். பல கூட்டங்களில் பேசினார்.
‘‘தமிழாசிரியர் களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, ‘இழவு வாரம்’ கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் தருமாம்பாளின் கோரிக்கையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இது தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
தருமாம்பாள் திராவிட இயக்கங்களில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். என்றாலும், பொதுத்தொண்டு என்று வரும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நின்றே தொண்டு செய்ய விரும்பினார். பொதுப் பிரச்னைகளுக்காக மற்ற அரசியல் இயக்கங்களுடன் அனுசரணையாகவே சென்றார்.
இரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தருமாம்பாள் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்து பணி ஆற்றினார். இன்று தமிழிசைப் பாடல்கள் மேடையில் முழங்குகிறது என்றால், அதில் அம்மையாரின் பங்கும் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக வாழாமல், தனது உழைப்பு, சிந்தனை அனைத்தையும் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ் மக்கள் இவற்றுக்காகவே அர்ப்பணித்த தருமாம்பாளுக்கு 1951_ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘வீரத்தமிழன்னை’ என்ற பட்டத்தை வழங்கினார்.
வீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்.
மக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959_ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.
பெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டன. அவற்றை வெளி உலகிற்குக் கொண்டு வருவது ஒன்றே அம்மையாருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்..
நன்றி : க. திருநாவுக்கரசு, எழுதிய ‘திராவிடஇயக்க வேர்கள்’
நக்கீரன் பதிப்பகம், சென்னை_23.
பைம்பொழில் மீரானின்
‘‘தலை நிமிர்ந்த தமிழச்சிகள்’’ தோழமை வெளியீடு, சென்னை_78.
பிறந்தோம். படித்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோம். என்று சிலர் வாழ்க்கை இருக்கும்.
ஆனால் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை அப்படியிருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரித்திரங்களாகி விடுகின்றன.
அப்படி ஒரு சரித்திரப் பெண்தான் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.
எல்லோரும்தான் கல்லூரி சென்று பாடம் படிப்பார்கள். ஆனால், எத்தனைபேர் தான் படித்த பாடத்துக்காகவே ஒரு தனிப்பட்ட கல்லூரியைத் துவக்கியிருக்கிறார்கள்? அது ராஜம்மாள் ஒருவர்தான்.
கல்வி. இதுதான் ராஜம்மாளின் இலட்சியம், ஆர்வம், ஆசை, கனவு எல்லாம்.
ஒரு சின்ன சம்பவம். ராஜம்மாளுக்கு திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பள்ளி இறுதி வகுப்பு படித்திருந்தார். திருமணமானதும் தன் கணவரிடம் அவர் முதலில் பேசியது தனது மேற்படிப்பு பற்றித்தானாம். தன்னை கல்லூரி சென்று படிக்க அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். கணவர் பெருந்தன்மைக்காரர். மனைவியின் மனம் நோகாமலிருக்க கல்லூரி படிப்புக்காக மனைவியை சென்னை அனுப்பினார். இப்போது படிக்கும்போது இந்த விஷயங்கள் சாதாரணமானதாய் தெரியலாம். ஆனால், இந்த சம்பவம் நடந்தது 1937_ல் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
ராஜம்மாளுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம். நிறையப் படிக்க வேண்டும். நிறைய பட்டங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை. அதற்கு அவர் தந்தையும் ஒரு காரணம்.
ராஜம்மாளின் தந்தை பெயர் பாக்கியநாதன் மைக்கேல். வனத்துறை அதிகாரி. பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள பார்கவி நேரில் கிராமம் என்றாலும், அவர் பணிபுரிந்து கொண்டிருந்தது, திருவண்ணாமலை அருகிலுள்ள செங்கம் பகுதியில். ராஜம்மாள்தான் மூத்த பெண். அவரைத் தொடர்ந்து எட்டு குழந்தைகள். பாக்கியநாதனுக்கு ஒரு விருப்பம். தனது பிள்ளைகள் அனைவரும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்று. இந்த விருப்பம் சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து வரும் விஷயத்தில் அதிசயம் இருக்கிறது. தனது பிள்ளைகளுக்குப் படிப்பறிவு இல்லாத குடும்பங்களில்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. விரும்பினார். படிப்பறிவு இல்லா குடும்பங்களிலிருந்து மருமகள், மருமகன் அமையும்போது, அந்தக் குடும்பங்கள் தன் குடும்பத்துடன் இணையும். படிப்பறிவு பெறும். அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினரும் கல்வியின் அருமையை உணர்வார்கள் என்பது பாக்கியநாதனின் எண்ணம். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் வேலை பார்த்தால் அங்கே உறவினர்கள் கட்டாயப்படுத்தி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடு வார்கள். படிக்க விடமாட்டார்கள் என்று அஞ்சியே சொந்த ஊருக்கு வராமல் இருந்தாராம். அந்த அளவு படிப்பின்மேல் பிரியம். இப்போது புரிகிறதா மகள் ராஜம்மாளுக்குக் கல்வி மீது வந்த காதலுக்கான காரணத்தை.
எப்போதுமே நல்லவர்களை விதி அதிகம் சோதிக்கும். அந்தப் பொல்லாத விதி ராஜம்மாளின் வாழ்க்கை யிலும் பொய்க்கவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை. தான் இறப்பதற்கு முன் தன் மூத்த மகள் ராஜம்மாளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதனால் பள்ளிப் படிப்பு படித்ததுமே ராஜம்மாளின் திருமணம் நடந்தது. சொந்த தாய்மாமன்தான் மாப்பிள்ளை. திருமணமான சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, குடும்பம் கஷ்டத்தில் தத்தளிக்கத் துவங்கியது. தாயின் நகைகள்தான் குடும்பத்தைக் காப்பாற்ற உதவியது.
கணவரின் உதவியுடன் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார் ராஜம்மாள். வேதியியல் பிரிவில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ‘மனையியல்’ பிரிவுக்கு மாறினார். இப்போது ‘ஹோம் சயின்ஸ்’ என்று ஸ்டைலாக அழைக்கப்படும் படிப்புதான் மனையியல். அந்தக் காலத்தில் இதுவும் ஒரு சாதனைதான். எல்லோரும் இயற்பியல், வேதியியல், என்று படித்துக்கொண்டிருக்க, மனையியல் படிக்க முன்வந்தார் ராஜம்மா. இந்தப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இது புதிய அறிவியல் என்பதால்.
நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழல் அது. மாணவியாக இருந்த ராஜம்மாள் தானே கை ராட்டையில் நூல் நூற்று, அதனால் தயாரிக்கப்பட்ட கதராடையேதான் அணிவார்.
மேற்படிப்பு முடிந்ததும் படித்த கல்லூரியிலேயே பேராசிரியை வேலை கிடைத்தது. இதில் ராஜம்மாளுக்கு மகிழ்ச்சி. இப்போதாவது தனது குடும்பத்தினருக்கு உதவ இயலுமே என்று தனது சம்பளத் தில் பாதியைத் தனது அம்மாவுக்குக் கொடுத்து விடுவார்.
இந்தியா சுதந்திரமடைந்த வருடம். அமெரிக்காவில் மனையியல் குறித்து ஆராய்ச்சி செய்ய ராஜம்மாளுக்கு வாய்ப்பு வந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கத்தைச் சென்று சந்தித்தார். அமைச்சருக்குச் சந்தோஷம். அப்போதெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு என்பது மிகப் பெரிய விஷயம். அமெரிக்காவில் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ராஜம்மாளின் ஆராய்ச்சிப் படிப்புத் துவங்கியது. மூன்று ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மூன்றாண்டுகளில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றது இன்னொரு சாதனை. மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண் ராஜம்மாள் தேவதாஸ்தான்.
இன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
இவரது திறமைகளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.
வாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இவருடைய பெண் கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார். எழுபத்தொன்பதாவது வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். எங்கோ தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் சாதனைகளைப் பாருங்கள்.
‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.
அவர் இன்று இல்லை. ஆனால் அவரது கல்விச் சேவை இன்றும் அவரது சாதனைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது..
திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பத்தா வது கி.மீ.இல் உள்வாங்கியிருக்கிறது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.
இன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் பல ஆயிரம் கிராமங்களுக்குக் கல்விக்கண் திறந்துகொண்டு இருக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய சௌந்தரம் ராமச்சந்திரனின் போராட்ட வாழ்க்கை பல தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டி.
நசுக்கப்பட்ட_ ஒடுக்கப்பட்ட_ புறக்கணிக்கப்பட்ட சமூகம் அல்ல அவரது சமூகம். அவருக்காகவோ அவர் பிறந்த சமூகத் திற்காகவோ அவர் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. சூழலும் இல்லை. அப்படியரு செல்வச்செழிப்புமிக்க குடும்பம் அவருடையது. ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார். ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும் _ ஒடுக்கப்படுவதையும் _ புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு கல்வி கற்று சமூக சேவையில் ஈடுபட்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள், இழந்த இழப்புகள் ஏராளம்.
நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மோட்டார் தொழிலில் ஆர்வம் ஏற்பட, அதனையே தனது குடும்பத் தொழிலாக மாற்றி, இந்திய மோட்டார் வாகன உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.வி.சுந்தரம்அய்யங்கார். அவரது துணைவியார் லட்சுமி அம்மை யாரோ சமூக சேவைகள் மூலம் அவரளவிற்குப் புகழ் பெற்றிருந்தவர். இந்த உன்னதமான தம்பதியருக்கு மகளாக 1905_ல் பிறந்தவர்தான் சௌந்தரம். பேரழகியாக பெண் குழந்தை இருந்ததால் சௌந்தரம் (அழகானவள்) என்றே பெயர் வைத்துவிட்டார்கள் பெற்றோர். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரை வியப்பில் ஆழ்த்தினார்.
சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த மோட்டார் தொழிலை மட்டும் டி.வி.சுந்தரம் அய்யங்கார் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை அவரை காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட வைத்தது. அதனால் தேசிய தலைவர்கள் நட்பு கிடைத்தது. பொதுப் பணியில் ஈடுபடுவதில் அவரது துணைவியார் லட்சுமியும் அவருக்கு இணையாகச் செயல்பட்டார்.
இதனால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. விவாதத்தின்போது சிறுமி சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே அவர் மனதில் தேசப்பற்று ஆழமாகப் பதிந்துவிட்டது.
அந்தக் காலத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜனுக்கும் சௌந்தரத்திற்கும் 1918_ல் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. கணவருக்கு 16 வயது.
திருமணமான கையோடு அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். 1922_இல் சௌந்தரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சௌந்தரத்திற்கு இதுதான் முதல் சோகம். அதை மறக்க அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சோகத்திற்கு மத்தியிலும் கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது சௌந்தரம் அம்மையாருக்குப் பெரிய ஆறுதல்.
இங்கிருந்துதான் சௌந்தரத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனை விழுகிறது. பட்டம் பெற்ற கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகிறார். கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.
இந்த இடத்தில்தான் அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருப்பு முனை விழுகிறது. மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கியது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தொடர்ந்து பிளேக் நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் கணவருக்கும் அந்த நோய் வந்து விட்டது. இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில், ‘‘நான் இறந்த பின்னர் நீ விதவைக் கோலம் பூணக் கூடாது. என்னைப் போல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய். விரும்பினால் மறு மணம் செய்துகொள். பிற்காலத்தில் நீ சிறந்த சேவகியாக வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றபடி அவரது உயிர் பிரிந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல், சௌந்தரம் விஷத்தைக் குடித்துவிட்டார். மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள்.
அன்று சௌந்தரம் முடிவு செய்தார். நாம் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். நம் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் நம் லட்சியம் என்று முடிவு செய்து மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். கணவர் எண்ணம்போல் டில்லி சென்று மருத்துவப் படிப்பு படித்தார். படிப்பு ஒரு புறம் என்றாலும் சமூக சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.
ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவரே பாடமும் கற்றுத்தர ஆரம்பித்தார். இவரது சமூக சேவையில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் தனி மருத்துவரான சுசிலா நய்யார் நட்பு கிடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற சுசிலா நய்யாரின் நட்பு கிடைத்ததால் பல தேசத் தலைவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு சௌந்தரம் அம்மையாருக்குக் கிடைத்தது. சுசிலா நய்யார் காந்தியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
சௌந்தரம் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்வு பெற்று, சென்னையில் ஒரு மருத்துவமனை தொடங்கி சேவை செய்யத் தொடங்கினார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். டெல்லியில் ஆரம்பித்த அவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. கணவரின் விருப்பத்தை நிறை வேற்றும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராகச் சேர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.
தனி மனுஷியாக இனி இயங்க முடியாத சமூகச் சூழல். அதனால் ஒரு ஆண் துணையைத் தேடினார். காந்தி வழியைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தார். ஆச்சாரம்மிக்க அவரது குடும்பம் அதனை எதிர்த்தது. பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் அது.
ராஜாஜிதான் முதலில் இவர்கள் திருமணத்தைப் பற்றி சுந்தரம் அய்யங்காரிடம் பேசினார். அவர் சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி காந்தியடிகளுக்குச் சென்றது. உடனே காந்தி அழைத்தார். இருவர் விருப்பத்தையும் கேட்டார். சுந்தரம் அய்யங்காருக்கு கடிதம் எழுதினார். ‘‘சௌந்தரம் ராமச்சந்திரன் திருமணத்தை நடத்தி வையுங்கள். இல்லா விட்டால் நானே நடத்தி வைப்பேன்’’ என்றார். இதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.
காந்தி இராட்டையில் தன் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நெய்த நூலில் செய்யப்பட்ட வேட்டியை மணமகனும் கஸ்தூரிபாய் நூற்ற நூலில் செய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் ஆடையாக அணிந்து கொண்டார்கள்.
திருமணத்திற்குப்பின் சென்னை வந்தனர். சௌந்தரம் டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து கிராம மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர்.
திண்டுக்கல் பகுதியில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். கிராம சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
கிராம சேவைக்கென்றே சின்னாள பட்டியைத் தேர்வு செய்து 1947_ல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைதான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் நிமிர்ந்து நிற்கின்றன.
1956_ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த போது இந்தியாவே சௌந்தரம் அம்மை யாருக்கு நன்றி சொல்லியது.
எங்கு வறுமை தாண்டவமாடு கிறதோ, எங்கு சாதி, மதக் கலவரம் உருவாகிறதோ அங்கு சௌந்தரம் அம்மையார் ஓடோடிச் சென்று அவர்களை நல்வழிப்படுத்துவார். கிராம மருத்துவ சேவைதான் தன் இரு கண்கள் என்று நினைத்தார். இவர் வகிக்காத பதவிகளே இல்லை. 1962_ல் இவரது சேவைக்காக ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.
காந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் எளிய உணவு, எளிய உடை இவற்றையே இறுதிக் காலம் முழுதும் அணிந்தார். 1984 அக்டோபர் 2_ம் தேதி அந்தச் சமூக சேவையின் ஜோதி அணைந்தது. தன் உடல் மீது மலர் அணிவிக்கக் கூடாது. எளிய கதர் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். யாரும் தொட்டு வணங்கக் கூடாது என்ற அவரது கடைசி கட்டளையை நிறைவேற்றிய மக்கள், அவர் வழி இன்றும் கிராம சேவையில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களுக்கு ஒரு ஊன்றுகோல் சௌந்தரம் அம்மையார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..
நன்றி: பைம்பொழில் மீரானின்
‘தலைநிமிர்ந்த தமிழச்சிகள்’ தோழமை வெளியீடு, சென்னை_78.
Article:
http://bsubra.wordpress.com/2008/03/27/veena-artist-dhanammal-thiruvengimalai-saravanan-notable-ladies/
பகல் கனவாகும் வேலை வாய்ப்பு
ப.செ. சங்கரநாராயணன்
ஆண்டுக்கு 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் இந்தியாவில், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மாநிலங்களவையில் அண்மையில் எம்.பி.க்களின் கூச்சல், குழப்பத்துக்கிடையே (மக்களவைத் தலைவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது) தாக்கல் செய்யப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 61-வது அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 55 கோடிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். அதில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துவரும் தகவல் கவலையளிப்பதாக உள்ளது.
1999-2000-ம் ஆண்டில் வேலையில்லாதோர் சதவிகிதம் 7.3 ஆக இருந்தது. 2004-2005-ல் 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, (வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உழைக்கும் வயதுப் பிரிவினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார். (உழைக்காமல் திரிகிறவர்களைச் சேர்க்கவில்லை)
இதற்காக அமைப்புசாரா தொழில்துறையில், புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் விவசாயத்தை விட்டு நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, 2015-ல் உள்நாட்டு தேவைக்கு பெருமளவிலான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என, மூத்த விவசாய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி மட்டும், விவசாயிகளை ஒருபோதும், அவர்கள் சந்தித்து வரும் உண்மையான அவலங்களில் இருந்து மீட்டெடுக்காது.
தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, நாட்டில் 836 மில்லியன் மக்கள் தினமும் ரூ. 20 வருவாயுடன், சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 546 மில்லியன் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர்.
33 சதவிகிதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்டுமே, பள்ளிக் கல்வி முடித்தவர்களாக உள்ளனர்.
இந்தியாவில் ஏறத்தாழ 400 பல்கலைக்கழகங்கள் இருந்தும் (போலிப் பல்கலைக்கழகங்கள் தனி), 10 சதவிகிதம் பேர் மட்டும் கல்லூரிக் கல்வி பயிலும் நிலை வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் ராஜசேகரன் பிள்ளை.
உயர்கல்வியை 11 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர். அதில் 4.3 சதவிகிதம் பேர் பெண்கள்.
இதில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வோரில் 90 சதவிகிதம் பேர் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், 2007-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோர் 28 சதவிகிதமாகவும், உயர்கல்வி கற்கச் செல்வோர் 33 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டனர். தாராளமயமாக்கல் கொள்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, இன்னும் அறிக்கை அளவிலேயே உள்ளது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 34,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே. (ராணுவத் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல்).
இந்தியாவின் 2.5 லட்சம் உள்ளாட்சிகளில் அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை.
குறிப்பாகத் தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்குக் காரணம் முற்றிலும் வணிகமயமாகி விட்ட உயர் கல்விதான்.
சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஊதியமும், அத்துறையில் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை நுழைக்க விரும்பும் பெற்றோர்களின் ஆசையும் ஒரு காரணம். அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் நிலையும் உள்ளது.
இந்நிலையில், அதிகமாக வெளிவரும் அரைகுறை பொறியாளர்களால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.
பொறியியல் கல்வி முடித்து வெளிவருவோரில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே, வேலைக்கான தகுதியுடன் உள்ளதாக, கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
மத்திய அரசு அடிப்படைக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்தும் பாடத் திட்டங்களையும் அமைத்தால்தான், உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறும் என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
அதுவரை தினம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என, அரசு பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது பகல் கனவுதான்.
Article:
http://bsubra.wordpress.com/2008/04/02/employment-opportunities-education-facilities-job-guarantee-schemes-export-processing-zones/
குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்
தஞ்சாவூர்க்கவிராயர்
புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.
புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.
குழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.
மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.
குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.
குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு?
குழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.
குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.
நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!
சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா?’ என்றேன்.
“எனக்குத்தான்’ என்றார் சிரித்தபடி.
“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.
குழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ?’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.
குழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.
புகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.
“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்?’ என்று கேட்டேன்.
“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.
அவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.
“மாமா, ரயில் என்ன சாப்பிடும்?’ என்று கேட்டான்.
இதுவா அசட்டுத்தனமான கேள்வி? அழகான கவிதை அல்லவா இது? ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது?
நாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:
லண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.
குழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.
கடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:
“குழந்தாய்! உன் கடிதம் கிடைத்தது!
நான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.
உன் பிரிமுள்ள,
விக்டோரியா.
நம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா?
குழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். அப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.
பள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.
குழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.
அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.
தஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.
குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.
“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’
இது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.
உலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன? குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்!
தமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்?’
இப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம்? அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.
அழகான ஆச்சரியமான புத்தகங்கள்.
குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்!
(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)
Article:
http://bsubra.wordpress.com/2008/04/02/book-reading-habits-for-kids-children-literature-knowledge-entertainment/
தமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.
அதற்கான தகவல் கிடைத்ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக விண்ணப்பித்துவைத்தோம்.
சுமார் இரண்டு வாரங்களுக்குமுன் விண்ணப்பித்த மென்பொருள்களை நேரில் வந்து இயக்கிக் காண்பிக்க அழைத்திருந்தனர்.
மொத்தம் 17 விண்ணப்பங்கள் வந்திருந்தன என்று நினைக்கிறேன். அதில் இருவர் (எங்களையும் சேர்த்து) இரண்டு மென்பொருள்களுக்குத் தனித்தனியாக விண்ணப்பித்தவர்கள். ஆக, மொத்தம் வந்தது 15 நிறுவனங்கள், அமைப்புகள். யார் யார் என்னென்ன மென்பொருள்களை அறிமுகம் செய்தார்கள் என்ற தகவல் என்னிடம் இல்லை.
ஆனால் வந்தவற்றுள் எங்களைக் கவர்ந்தது திருச்சியிலிருந்து வந்திருந்த 'ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி' சார்பில் கொண்டுவந்திருந்த காது கேளாதோருக்கான சைகை மொழியின்மூலம் கணிதம் கற்பிக்க உருவாக்கியிருந்த மென்பொருள். அதையும்கூட அகஸ்மாத்தாகத்தான் பார்க்கமுடிந்தது. அவர்கள் கொண்டுவந்திருந்த டெமோ குறுந்தட்டு வேலை செய்யவில்லை. அதனால் அவர்கள் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தனர். அப்போது என் அலுவலக சக ஊழியர் நாகராஜன், அதனைச் செப்பமிட்டு வேலை செய்யுமாறு செய்தார். அப்போதுதான் அந்த மென்பொருள் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஓரளவுக்குப் பார்க்கமுடிந்தது.
முனைவர் சா.பிரபாகர் இம்மானுவேல், அவர்கூட ஒரு சகோதரி (பெயர் உடனடியாக ஞாபகம் இல்லை) ஆகியோர் வந்திருந்தனர். இம்மானுவேலுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இம்மானுவேல் இயல்பியலில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் குறைதிறனுள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல் தொடர்பாகவும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். குறைதிறன் என்றால் கண், காது போன்ற புலன்களில் குறைபாடுள்ளவர்கள், அல்லது மூளைத்திறனில் சற்றே மாறுபாடுள்ளவர்கள்.
கற்பித்தல் தொடர்பாக பல கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் இன்றைய கல்வித்திட்டம், அதன் குறைபாடுகள், அவை எவ்வாறு பள்ளிக் குழந்தைகளைத் துன்புறுத்துகின்றன என்பதை விளக்கினார். எந்த வகையில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் திறனைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர், எப்படி குழந்தைகளின்மீது அழுத்தம் கொடுக்கின்றனர், இதில் பள்ளிக்கூட ஆசிரியர்களின் பங்கும் எவ்வளவு மோசமாக உள்ளது என்று விளக்கினார்.
பல கற்றல் குறைபாடுகளை இளம் வயதில் கண்டுபிடித்துவிட்டால், அதாவது 3-4 வயதுக்குள்ளாகவே, உடனடியாக அவற்றைச் சரிசெய்துவிடலாம் என்றார்.
மற்றொரு முக்கியமான விஷயமாக அவர் சொன்னது ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்பிப்பதில் மாட்டிக்கொள்ளும் சராசரிக் குழந்தைகளின் பாடு. பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வி கற்பித்தலில் குழந்தைகளைப் புகுத்திவிடுகின்றனர். ஆனால் பிற இடங்கள் அனைத்திலும் (வீடு, விளையாடுமிடம், பள்ளிக்கூடம்!) ஆங்கில ஒலிப்பான்களையே கேட்காத ஒரு குழந்தை கடுமையான சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. ஒரேமாதிரி ஒலிக்கும் இரு சொற்களுக்கு இருவேறு ஆங்கில ஸ்பெல்லிங்கள் இருப்பதைப் பல குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் மொழியைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலில், சிந்தனையை, தகவலைப் புரிந்துகொள்ளக் கஷ்டப்படுகின்றனர். விளைவு: மோசமான ஒரு மாணவரை உருவாக்கிவிடுகிறோம்.
இம்மானுவேலின் தீர்வு: பள்ளிக்குள்ளே நுழையும் குழந்தைகளுக்கு ஐ.க்யூ சோதனை நடத்தி, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குமேல் உள்ளவர்களை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துக்கொள்வது. அதனால் மற்றவர்களுக்கு ஆங்கிலமே சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதல்ல. ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்தால் அவர்களுக்குப் போதும். அந்த மொழியிலும் நாளடைவில் நல்ல திறனைப் பெறலாம்.
இதனை எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றேன் நான். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொண்டார்கள் என்றால் ஓரிரு நாள்கள் அழுதுவிட்டு பெற்றோர்கள், தமிழ்வழிக் கல்வியில் பிள்ளைகளைச் சேர்த்துவிடக்கூடும் என்று நம்புகிறார் இவர். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இப்போது இல்லை. பெற்றோர்களது புரிதல் அதிகமாக வேண்டும். அப்போதுதான் இதற்கு விடிவுகாலம் வரும்.
பேச்சு 'தாரே ஜமீன் பர்' பக்கம் திரும்பியது. படம் நன்றாக இருந்தது என்றாலும் பிரச்னை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். தான் எழுதியிருந்த ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். (கற்றலில் பிரச்னை/குறைபாடு, பெற்றோர்-ஆசிரியர் கையேடு. வெளியீடு: ஹோலி கிராஸ் சர்வீஸ் சைசைட்டி, திருச்சி. விலை ரூ.50)
இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும். அதற்கு சில நாள்கள் ஆகலாம். அதற்கு முன்னதாக இந்தப் புத்தகத்தை அவர் ஏன் எழுதியுள்ளார் என்பது பற்றி அவரே கூறுவதைக் கேளுங்கள்:
இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் ஆங்கில மொழிவழிக் கல்விமுறை நோக்கி ஓடுவதை யாராலும் தடுக்கமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அவ்வாறு செல்லும் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை பிரச்னைக்குள் செல்லமாட்டான் என்று எண்ணுகின்றனர். ஒரு குழந்தை கல்வியில் தோல்வி நிகழ்வினை வெளிப்படுத்தும்போதும் பெரும்பாலான பெற்றோர்கள் அதற்கான காரணங்களை ஆராயாமல், தனிப்பயிற்சி (tuition), அபகஸ், நினைவாற்றல் பயிற்சி எனப் பல வழிகளில் செல்வதையும் நாம் தினசரி காண்கிறோம். சுமார் 8 அல்லது 9 வயதில் கல்விப் பிரச்னையுடன் குணாதிசயப் பிரச்னைகளும் அதிகமாக வெளிப்படும்போதுதான் பெற்றோர்கள் உதவி தேடி அலைகின்றனர். அந்நிலையிலும்கூட இது ஒரு கல்விப் பிரச்னை என உணராமல் மருத்துவப் பிரச்னை என பல மருத்துவர்களைத் தேடிச் செல்வதும், மருந்துகளின்மூலமாக இப்பிரச்னைகளை நீக்கமுடியுமா என முயற்சிப்பதும் நாம் காணும் ஒரு நிகழ்வு.
இந்தச் சூழ்நிலையில், என்னிடம் உதவி வேண்டி வருபவர்களின் எண்ணிக்கை தினசரி கூடி வருவதைக் காணும்போது, ஒரு பெற்றோராக என் மனது இந்தச் சூழ்நிலைகளில் உண்மையினை விளக்கி ஒரு புத்தகமாக வெளியிட எண்ணியது. என்னிடம் வழிகாட்டுதல் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுமே, குழந்தையின் கல்வி நிலைகளில் தங்களது அறியாமையினை உணர்ந்து, பெற்றோர்கள் அறியாமை நீக்க ஒரு புத்தகம் எழுதுங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். அதன் விளைவே இந்தப் புத்தகம்.
ஆனால் இந்தப் புத்தகத்தை நீங்கள் எளிதாகக் கடைகளில் பெற்றுவிடமுடியாது. உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் கற்றலில் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படலாம் என்று நீங்கள் எண்ணினால், முனைவர் இம்மானுவேலை நீங்கள் அணுகலாம்.
அவரது முகவரி:
ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி
Plot No. 3, எட்டுப்பட்டை காம்பவுண்ட்
பெரிய ஆஸ்பத்திரி பின்புறம்
புத்தூர், திருச்சி 620 017
தொலைபேசி எண்: 2771544, 2770031
மின்னஞ்சல்: holy.cross.service.society@gmail.com
prabakartrichy@hotmail.com
நான் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகமும் இந்த முகவரியில் கிடைக்கும். முக்கியமாக அனைத்துப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம்.
[பி.கு. இன்று உலக குழந்தைகள் புத்தக தினம். உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் புத்தகம் படிக்க ஆரம்பிக்கவில்லையென்றால் இன்றே தொடங்குவீர்.
இன்று காலை 10.00-11.00 மணிக்கு சென்னை Big FM-ல் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தொடர்பாக நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி வருகிறது. பல பாடல்களுக்கு மத்தியில் நான் சிறிது பேசவும் கூடும்!]
Article:
http://thoughtsintamil.blogspot.com/2008/04/blog-post.htm
இலவசமாய் அரிசி கொடுக்கிறார்கள், தொலைக்காட்சி பெட்டி தவிர சாப்பாடும் போடுகிறார்கள். இதெல்லாம் விட்டு இலவசமாய் கல்வி கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும்.
அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாய் கொடுக்கவேண்டும் என்று ஒரு அரசியல் வாதிக்காவது தோன்றுமா? கல்விக்கு Cess என்று ஒன்று போன வருடம் போட்டார்கள். என்ன ஆயிற்று அந்த பணம்? யாருக்காகவாது இலவசக்கல்வி கொடுப்பார்களா? கொடுத்தார்களா?.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போனால் Donation என்றும் வருடாந்திர கட்டணம் என்று இன்றும் கொடுக்கவேண்டி இருந்தது. இன்றும் இருக்கும். ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டுமென்றால் கட்டாயம் கொடுக்க வேண்டும். அங்கேயே பிரிவினை. காசுள்ளவன் ஆங்கிலம் படிப்பான் காசில்லாதவன் தமிழ் படிப்பான் என்று. அரசாங்கப்பள்ளிகளிலேயே இந்த நிலைமை.
எனக்கு தெரிந்து என் நண்பனின் அம்மா வீட்டு வேலை செய்து தான் படிக்கவைத்தாள். அவளிடம் ஆயிரம் ரூபாய் இல்லை. அதற்காக நாயாய் பேயாய் அலைந்து அந்த தாய் பணம் கட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது. கொடுமை என்னவெனில் மற்ற செலவுகளுக்கு அந்த அம்மா தலைமை ஆசிரியர் வீட்டிலேயே வேலை செய்து தான் 2 வருடம் மேல்நிலைக்கல்வி படிக்கமுடிந்தது என் நண்பனால்.
வியாபாரக் கல்வி, இட ஒதுக்கீட்டுக் கல்வி( பணம், சமூகம்) என்று என்ன என்ன வழி உண்டோ அவ்வளவிலும் பிரிந்து தான் கிடக்கிறோம். எல்லோரும் மறந்துவிடும் மற்றொரு பிரிவினை வட்டார அளவில் கல்வி. வடநாட்டு மக்களை கேளுங்கள், பாரதியாரை தவிர உருப்படியாய் ஒரு தமிழ்நாட்டு சுதந்திர போராட்டவீரர் பேர் தெரியாது.
அடுத்தது இந்த கல்வித்திட்டப்பிரிவினை. CBSE படித்தவனுக்கு IIT entrance சுலபம். மாநிலக்கல்வி படித்தவனுக்கு பொறியியல், மருத்துவம் சுலபம் என்று குழப்படியான கல்வி முறை. இதில் ஆங்கிலோ இந்தியன் என்று கல்வி முறை வேறு. தமிழ், ஊறுகாய் மாதிரி அந்த கல்வி முறையில் இருக்கிறது.
சுதந்திரம் வாங்கி 60 வருடம் ஆகிறது இன்னும் என்ன ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை. இதில் படித்த ஒரு நண்பனுக்கு தமிழ் படிக்க வராது. நம்பினால் நம்புங்கள், ஆங்கிலோ இந்தியன் கல்வி படித்த அவனால் ஒரு கட்டுரையோ கவிதையோ தமிழில் படிக்க இயலாது. நான் மிகவும் வருந்தி சொன்னதன் பேரில் பல முறை புத்தகத்தை திணித்து படி படி என்று படுத்தியதின் பேரில் என்னை திருப்திபடுத்த பொன்னியின் செல்வன் படித்தான் அவன், ஆங்கிலத்தில். ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன் படித்த ஒரே(எனக்குதெரிந்து) தமிழன் அவனாகத்தான் இருக்கும். ஷேக்ஸ்பியரிலும் ஷெல்லியிலும் வித்தகன் அவன். என்ன மாதிரியான் ஒரு கல்வி முறை இது?
அதற்கு நேர் எதிராக கிராமத்தில் எனக்கு மற்றொரு நண்பன். ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது. கடைசியில் ஆங்கில தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்று காவல்துறையில் ரிப்போட்டராக போக வேலை கிடைத்த போது ஒரு முழு லிப்கோ அகரமுதிலியை நாம் பாட புத்தகம் படிப்பது மாதிரி படித்தான். ஏதாவது பக்கத்தை பிரித்து ஏதாவது சொல்லைக்கேள் அர்த்தம் சொல்கிறேன் என்று படுத்தி இருக்கிறான்.
ஒரு ஒழுங்குபட்ட கல்வி முறை இல்லை இதனால் பாதிக்கப்படுவது எல்லோருமே தான். ஏழைகளுக்கும், கிரமத்தானுக்கும் தமிழைவிட்டால் நாதி இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கு தெரிந்து பல பேர் நல்ல ஆங்கில அறிவில்லாத்தால் நேர்முகத்தேர்வில் தோற்றவர்கள் இருக்கிறார்கள். என்ன ஒரு குழப்படியான செயல்திட்டம் இது.
வருடம் போய் வருடம் வந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும், பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வு கோர்ட் கோர்ட்டாக போய்கொண்டிருக்கிறது ஒரு மராட்டிய மாநில கல்வி முறையில் 60 மதிப்பெண் வாங்கியவனையும் தமிழ்நாட்டில் 60 மதிப்பெண் வாங்கிவனையும் ஒரே நிகரில் வைக்கமுடியுமா? முதலில் எந்த சிஸ்டத்தில் படித்தவன் என்று கேள்வி அல்லவா வருகிறது!!!
இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம், ஒரே கல்லூரி நுழைவு முறை என்றல்லவா இருக்கவேண்டும். அப்படி இருந்தால் என்ன மாறிவிடும். அதில் சாதகம் என்ன, பாதகம் என்ன? வெறும் கேள்விகளாய் இருக்கிறதே அன்றி பதில் தான் இல்லை.
Article:
http://msathia.wordpress.com/2007/10/10/நம்-கல்விமுறை-உருப்படுமா/
இந்த உலகில் நீ பார்க்கும் பெண் உண்மையான பெண் அல்ல.அவள் நூற்றாண்டு காலமாக கறை படுத்தப் பட்டு வருபவள். பெண் கறை படிந்தவளாக இருக்கும் போது ஆண் மட்டும் இயற்கையானவனாக இருக்க முடியாது.ஆணுக்குப் பிறப்பளிப்பவளே அந்தப் பெண்தானே. அவள் இயல்பாக இல்லையெனில் அவள் குழந்தைகளும், அது ஆணோ, பெண்ணோ - அந்த குழந்தைகளும் இயல்பாக இருக்காது.
பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவை. ஆனால் விடுதலை என்ற பெயரால் நடந்துக் கொண்டிருப்பவை வெறும் முட்டாள்தனமானவையே.அது வெறும் காப்பியடித்தல், வேஷமிட்டுக் கொள்ளல், விடுதலை அல்ல.
உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச் சரியான ஒரு பெண்ணாய்தான் மாற்றும். ஆணின் நகலாக அல்ல. ஆனால் இப்போது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் சிகரெட் பிடிக்க வேண்டும். ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள். பெண் இரண்டாம் தர ஆணாக மாறிக் கொண்டிருக்கிறாள்.
பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக சுதந்திரம் என்றும் கிடைக்காது. பெண்ணின் சுதந்திரம் ஆணின் சுதந்திரத்திற்கு மிக அவசியம்.அடிமைப் படுத்தப் பட்ட ஒரு பெண் வெகு நிச்சயம் ஆணையும் அடிமையாக்க முயலுவாள்.அவள் வழி நுட்பமானது. மிக மிக நுட்பமான வழிகளில் அவள் ஆணை அடிமைப் படுத்த முயலுவாள்.
அவள் உன்னுடன் நேராக மோத முயல மாட்டாள். அவள் சண்டை மறைமுகமானது. அவள் அழுவாள். கதறுவாள். அவள் உன்னை அடிக்க மாட்டாள். தன்னைத் தானே அடித்துக் கொள்வாள். மனைவி தன்னைத் தானே அடித்துக் கொள்வதன் மூலம், அழுது கதறுவதன் மூலம், மிகப் பலமான ஆண் கூட அவளுக்கு அடிமையாவான். பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவள் அதை ஆணுக்கும் தர முடியும்.
கடந்த காலத்தில் ஆண் பெண்களை மிகவும் புனிதமானவர்கள், தேவதைகள் என்று நம்ப வைத்தான். ஆண் தூய்மையற்றவன். பையன்கள் பொறுக்கிகள். ஆனால் பெண்? அவள் தெய்வீகமானவள். ஆண் பெண்ணை உயரமான பீடத்தில் ஏற்றி வைத்தான். பெண்ணை அடக்கி வைக்க அவனது தந்திரம் அது.
ஆண் அவளை வணங்கினான். அப்படி வணங்குவதன் மூலம் அவளை அடக்கி வைத்தான்.ஆம். அப்படி இயல்பாக பீடத்தின் மேல் அமர்த்தப்பட்ட பெண் தன்னை தெய்வீகமாய் நினைத்துக் கொண்டாள். அதனாலேயே ஆண்கள் செய்தவற்றையெல்லாம் அவளால் செய்ய முடிய வில்லை.
அவளது ஈகோவை, ஆணவத்தை மீறி அவளால் எதுவும் செய்ய முடிய வில்லை. அந்த உயர்ந்த பீடம் அவளது ஈகோவிற்கு மிகவும் திருப்தியளித்தது. அவள் ஒரு தாய். அவள் ஒரு தெய்வம். ஆணை விட அதிக தெய்வத்தன்மை உடையவள்.
அதனாலேயே ஆண் காலம் காலமாய் அவனது வழியிலேயே இருந்து வருகிறான். பெண் மட்டும் எப்போதும் புனிதத் தன்மையுடையவளாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப் பட்டு வருகிறாள். பெண் சராசரியாக இருக்க என்றுமே அனுமதிக்கப் பட்டதில்லை. சராசரி பெண்கள் மோசமானவர்கள் என்ற கற்பிதத்தை இந்த சமூகத்தில் ஆண் உருவாக்கி வைத்திருக்கிறான்.
நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைகளில் ஒன்று இது: நீ யாரையாவது அடிமைப் படுத்தினால் நீயும் கடைசியில்,முடிவான அடிமைதான் ஆவாய், சுதந்திரமாக இருக்க முடியாது. நீ சுதந்திரமாக இருக்க விரும்பினால், மற்றவர்களுக்கும் விடுதலையைக் கொடு.
மார்க்ஸ் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்த்தார். ஏழைகள் பணக்காரர்கள் என்று. நான் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்க்கிறேன். ஆண்கள். பெண்கள்.
ஆண் பல நூற்றாண்டுகளாய் எஜமானனாய் இருக்கிறான். பெண் அடிமையாய் இருக்கிறாள். அவளை ஏலம் போட்டார்கள். விற்றார்கள். உயிருடன் எரித்தார்கள். எந்த ஒரு காரணத்தின் பொருட்டாவது அவளை கற்பழிக்க முனைந்தார்கள்.
பெண்களுக்கு போர்களில் ஈடுபாடு கிடையாது. பெண்களுக்கு அணுகுண்டு ஆயுதங்களில் ஈடுபாடு கிடையாது. அவர்களுக்கு கம்யூனிசத்திலும், முதலாளித்துவத்திலும் ஈடுபாடு கிடையாது.
இந்த எல்லா இசமும் தலையிலிருந்து வந்தவை. பெண்கள் வாழ்வை அனுபவிப்பதில், வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை ரசிப்பதில், தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ரசனையுடன் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.
ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா? பெண்களை நேசியுங்கள்.
- பெண்ணின் பெருமை யிலிருந்து ஓஷோ.
Powered by Bookmarkify™
Article:
http://feeds.feedburner.com/~r/nandha/~3/170985119/
உ . ரா. வரதராசன்
மோரிஷஸ், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவு. அதன் மக்கள்தொகை வெறும் 12 லட்சம் மட்டுமே; நிலப்பரப்பைக் கணக்கிட்டால் இந்தியாவில் நூறில் ஒரு பங்குக்கும் (ஒரு சதவிகிதத்திற்கும்) குறைவானதே. இந்த நாட்டோடு இந்தியா செய்து கொண்டுள்ள ஓர் ஒப்பந்தம் இந்திய நாட்டின் சட்டங்களைச் செல்லாக் காசாக ஆக்கிவிட்டு, வரியை ஏய்த்துக் கொள்ளை லாபம் கொழிப்பதற்கான ராஜபாட்டை ஆகி இருக்கிறது.
இந்தியா - மோரிஷஸ் நாடுகளுக்கிடையே இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கை என்ற பெயரில் 1983-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இரண்டு நாடுகளின் குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் பரஸ்பரம் வியாபாரம் மற்றும் தொழில் தொடர்புகளை மேற்கொள்கிறபோதோ அல்லது வேறு வகையில் வருமானம் ஈட்டுகிறபோதோ சொந்த நாட்டிலும் வருமான வரி கட்ட வேண்டும். வெளிநாட்டிலும் வரி கட்ட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவதுண்டு. இது ஒரே வருமானத்தின் மீது இரண்டுமுறை வரி கட்டுகிற இரட்டை வரி விதிப்பாக அமைந்தது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு நாட்டில் வரி விதிப்புக்கு ஆட்பட்டால் மற்றொன்றில் வரிவிலக்கு அளிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை உருவானது.
இந்தியா இதுபோன்ற உடன்படிக்கைகளை 50-க்கும் மேற்பட்ட நாடுகளோடு செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கைகள் அனைத்தும் ஒரே விதமான சரத்துகளை உள்ளடக்கியதாக இல்லை. மோரிஷஸ் நாட்டோடு செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையை ஒத்த தன்மையில் குறிப்பிட்ட சில நாடுகளோடு மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்திய - மோரிஷஸ் உடன்படிக்கை அமலில் இருந்த முதல் பத்தாண்டுகளில், பிரச்னை எதுவும் பெரிதாக எழவில்லை.
1991ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற உலகமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்த மோரிஷஸ் உடன்படிக்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. 1992-ம் ஆண்டு முதல், வெளிநாட்டுப் பெரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதே 1992ஆம் ஆண்டில் மோரிஷஸ் அரசாங்கமும் கடல் கடந்த வியாபார நடவடிக்கைகளுக்கான ஆணையம் (ஞச்ச்ள்ட்ர்ழ்ங் ஆன்ள்ண்ய்ங்ள்ள் அஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) ஒன்றை நிறுவச் சட்டம் இயற்றியது. அதன் கீழ் எந்த ஒரு வெளிநாட்டுக் கம்பெனியும், மோரிஷஸில் ஒரு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து கொண்டு, வெளிநாடுகளில் (பங்குச்சந்தை) வர்த்தகத்தில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது.
இதற்குப் பிறகுதான் மோரிஷஸ் பாதை வழியாக வெளிநாட்டு நிதி மூலதனம் வேக வேகமாக இந்தியாவிற்குள் நுழையத் தொடங்கியது. 1992 - 93இல் மோரிஷஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் (பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு) வந்த முதலீடுகள் ரூ. 17 கோடியாக இருந்தது. இதுவே 2000 - 01ஆம் ஆண்டில் ரூ. 74,050 கோடியாக உயர்ந்தது. சராசரியாக, இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதன வரவுகளில் மூன்றில் ஒரு பகுதி மோரிஷஸ் பாதை வழியாக வந்ததுதான் என்று மத்திய அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் உணர்த்துகின்றன. 12 லட்சம் மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ள மோரிஷஸ் நாட்டில் இவ்வளவு பெருந்தொகைகள் மூலதனமாக ஆண்டுதோறும் உருவாகி வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் வாய்ப்பு அறவே இல்லை; எனவே, மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மூலதனம் மோரிஷஸ் பாதை வழியாக அனுப்பப்படுகிறது என்பதே யதார்த்தம்!
மோரிஷஸ் பாதை மீது பன்னாட்டு மூலதனத்திற்கு ஏன் இவ்வளவு மோகம்? வெளிநாட்டுக் கம்பெனி மோரிஷஸ் நாட்டில் துணைக் கம்பெனியைப் பதிவு செய்வது மிக மிக எளிது. பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகள் இவ்வாறு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை மோரிஷஸ் பாதை வழியே இந்தியாவுக்கு அனுப்புவதும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாபம் பெருக்குவதும், அந்த லாபத்தை மோரிஷஸ் வழியாகவே திருப்பி வரவழைத்துக் கொள்வதும் மிக எளிதாக நடைபெற்று வருகிறது.
இப்படிப் பெறப்படும் லாபத்திற்கு இந்திய - மோரிஷஸ் உடன்படிக்கை காரணமாக, இந்தியாவில் எந்த வரியும் மோரிஷஸ் நாடு கட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே, எந்த வரிச்சுமையும் இல்லாமல் வருமானம் கொழிக்கிற வழியாக மோரிஷஸ் பாதை மாறிவிட்டது.
இப்படி 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மோரிஷஸ் கம்பெனிகளாக, இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சற்றும் சளைக்காமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் கம்பெனிகளும் மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்குப் பயன்படுத்தி வருகின்றன. இதன் விளைவு, மோரிஷஸ் பாதையில் வலம் வந்து பங்குச்சந்தை சூதாட்டத்தில் சம்பாதிக்கும் கொள்ளை லாபத்துக்கு இந்தியாவிலும் சரி, மோரிஷஸிலும் சரி எந்த வரியும் கிடையாது.
இந்த மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்காகப் பயன்படுத்திய சில உள்நாட்டுக் கம்பெனிகள் மீது இந்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து மார்ச் 29, 2000 அன்று ஆணை பிறப்பித்தது. இதன் காரணமாக வெளிநாட்டு மூலதனம் வருவது தடைபட்டு விடும்; வந்த மூலதனமும் வெளியே பறந்தோடி விடும் என்ற அச்சம் காரணமாக, அவசர அவசரமாக ஏப்ரல் 13, 2000 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மோரிஷஸ் அரசாங்கம் ஒரு கம்பெனிக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கியிருந்தாலே, அந்தக் கம்பெனியின் உரிமையாளர்களோ, அதன் மூலம் முதலீடு செய்பவர்களோ மோரிஷஸில் குடியிருப்பதாகக் கருதப்படுவார்கள்; அது தொடர்பாக எந்தவித விசாரணையோ, ஆட்சேபமோ எழுப்பக்கூடாது என்பது அந்த சுற்றறிக்கையின் கட்டளை!
இது நியாயமற்றது என்று “சுதந்திரம் காப்போம் இயக்கம்’ என்ற அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கைத் தொடுத்தவர்களில் சிவ காந்த் ஜா என்ற வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையரும் ஒருவர். தில்லி உயர் நீதிமன்றம் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. “”இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு என்பது, இரண்டு நாடுகளிலும் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகத்தானே தவிர, எந்த நாட்டிலும் வரியைக் கட்டாமல் ஏய்ப்பதற்காக அல்ல; அதை அனுமதிக்க முடியாது” என்பது அத்தீர்ப்பின் சாரம்.
மத்திய அரசோ இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது; “குளோபல் பிசினஸ் இன்ஸ்டிட்யூட்’ என்ற சர்வதேச முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு ஒன்றும் இந்த மேல்முறையீட்டில் மனுதாரராகச் சேர்ந்து வழக்காடியது. (இதன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பின்னர் மத்திய அரசின் சட்ட அமைச்சரானவர்!) உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது.
மோரிஷஸ் உடன்படிக்கை வரிஏய்ப்புக்கான வசதியான பாதையாகப் பயன்படுகிறது என்பதை 2005இல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்பாக 2001இல் கேத்தன் பாரிக் பங்குச்சந்தை ஊழலை விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையும் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தக் கூட்டுக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “”மோரிஷஸ் பாதை தவறாகப் பயன்படுத்தப்படுவது எனக்குத் தெரியும். ஆனால் (மத்திய அரசின்) வரி வருவாயைப் பெருக்குவதை விட வெளிநாட்டு மூலதனத்தின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மோரிஷஸ் உடன்படிக்கையின் ஓட்டைகளை அடைக்க முற்படவில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
2004-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்போம்’ என்று குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கூறியிருந்தது. ஆனால் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தின் வாக்குறுதி “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான உறுதிமொழியல்ல. அதை இந்தியக் கம்பெனிகள் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மட்டுமே’ என்று நிதியமைச்சர் புதிய விளக்கமளித்தார். இது முந்தைய அரசு விட்டுச்சென்றுள்ள பிரச்னை; சர்வதேச ராஜிய உறவுகள் சம்பந்தப்பட்ட ஒன்று; தன்னிச்சையாக இந்தியா இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் அவர் கைவிரித்துவிட்டார்.
இந்தியாவைப் போலவே மோரிஷஸýடன் உடன்படிக்கை செய்துகொண்ட இன்னொரு நாடு இந்தோனேஷியா. மோரிஷஸ் நாடு தனது சட்டத்தைத் திருத்தி வெளிநாட்டவர்கள் மோரிஷிஸில் துணைக் கம்பெனிகளைப் பதிவு செய்து மற்ற நாடுகளில் வர்த்தகம் செய்ய அனுமதித்ததைக் காரணம் காட்டி 2005ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தோனேஷியா மோரிஷஸ் நாட்டுடனான உடன்படிக்கையை ஒட்டுமொத்தமாக ரத்தே செய்துவிட்டது. இந்தோனேஷியாவுக்கு சாத்தியப்படுகிற இந்த வழிமுறை இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது என்பதில் எந்த நியாயமும் இல்லை.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாக மோரிஷஸ் பாதை தொடர்கிறது.
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)