ரசித்தவை

செந்தில்குமார் | www.senthil.co.nr |

இரா. செழியன்
இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.
குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.
இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.
இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”
தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.
ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS - Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS - Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.
ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு - தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.
உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.
இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு - தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.
ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் - துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.
ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.
தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”
1954 ஆம் ஆண்டு மத்திய - மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 - 2006-இல் மத்திய - மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.
அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.
அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.
அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?
தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.
தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் - அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் - அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.
சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.
சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.
அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.
(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
Article:
http://bsubra.wordpress.com/2007/12/13/public-administration-accountant-generals-office-iaas-indian-audit-and-accounts-service/

0 comments: